மாணிக்கக்கல் வர்த்தகத்தில் மீண்டெழுமா கிந்தோட்டை?

காலி மாவட்டத்தில் அநேகமானோர் மாணிக்கக்கல் வியாபாரத்தில் பாடுபடுவர் அவர்களுள் கிந்தோட்டை வாழ் முஸ்லிம் மக்களின் பிரதான வாழ் வாதாரத் தொழிலாக மாணிக்கக்கல் வியாபாரம் காணப்படுகின்றது. ஆரம்பகாலம் தொட்டு இன்றுவரை மாணிக்கக் கல்லானது அந்த மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் ஒருதொழில் முயற்சியாகவே இருந்து வருகின்றது பல மாணிக்கக்கல் வியாபாரிகளை உருவாக்கிய கிராமம். அந்தக் கிராமத்தில் பாடசாலைப் படிப்பை முடித்து, மேற்படிப்பைத் தொடர முடியாத எத்தனையோ சகோதரர்கள் இந்தத் தொழிலில் முன்னேறி வளர்ந்து வருகின்றனர்.

மாணிக்கல் வியாபாரத்தின் மகுடமாக கிந்தோட்டையில் வசிக்கக் கூடியவர்கள் மாணிக்கக்கற்களை வெட்டுதல், பட்டை தீட்டுதல் மற்றும் ஒப்பமிடுதல் போன்றவைகளைச்செய்து சீரான முறையில் நகைகளை அமைக்கக்கூடிய தொழிலிலும் ஈடுபட்டு வருகின்றனர். அத்தோடு காலி மாநகரில் வாழ்ந்த அன்றைய கால மக்கள் உலகின் பல நாடுகளுக்குச் சென்று மாணிக்கக் கற்கள் பதிந்த நகைகளை வியாபாரம் செய்ததோடு, அதற்கான வியாபாரத் தளங்களையும் அமைத்தனர். அவர்களுக்குத் தேவையான நகைகளை உற்பத்தி செய்யும்போது அந்த நகைகளுக்கு மூலகாரணமாக விளங்கிய பார்வை மாணிக்கக் கற்களிடமே தங்கியிருந்தது.


இலங்கையின் தென்பகுதியின் கரையோரப் பிரதேசங்களில் காலி மாநகரம் அதிகமாக சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்த ஓர் இடமாகும். அதிலும் காலி கோட்டையைப் பார்வையிடவும். அதன் இயற்கைத் தன்மையையும் இரசிக்கவும் அநேகமான வெளிநாட்டுப் பயணிகள் வருவர். இதற்காக கோட்டையை அண்மித்த பாதிகளில் நகைக் கடைகளையும் ஆரம்பித்தனர். அப்போது அந்த நகைகளுக்கு பொருத்துவதற்கு மாணிக்கக் கற்களும் தேவைப்பட்டன. அதற்காக மாணிக்கக் கற்களை வெட்டி, பட்டை தீட்டி, ஒப்பமிடும் தொழிவில் கிந்தோட்டை வாழ் மக்களே அதிகமாக ஈடுபட்டு வந்தனர். இதன் காரணமாக அந்தக் கிராம மக்களின் தொழிலும், தொழில் முயற்சியும் முன்னேற்றமடைந்தது. பலர் வெளிநாடுகளுக்குச் சென்று மாணிக்கக் கற்களை கொண்டு வந்து, அவற்றை வெட்டி, பட்டை தீட்டி, ஒப்பமிட்டும் பணிகளை மேற்கொண்டு, சில வெளிநாட்டு வியாபரிகளுக்கு விற்பதோடு இலங்கை நாட்டு வியாபாரிகளுக்கும் விற்றனர். இலங்கையில் கிந்தோட்டை வாழ் மக்கள் மட்டுமல்ல பேருவளை. இரத்தினபுரி போன்ற இடங்களிலும் பெரும்பாலான முஸ்லிம்கள் மாணிக்கக்கல் வியாபாரத்தில் ஈடுபடுகின்றனர். உண்மையிலேயே மாணிக்க வியாபாரம் ஒரு செழிப்பான தொழிலாகக் காணப்படுகின்றது. மாணிக்கக்கல் வணிகத்தின் முதலாம் நிலை உற்பத்தியான மாணிக்கம் அகழ்தலில் பெரிய அதிக்கம் முஸ்லிம்களிடம் காணப் படாவிட்டாலும் அதன் இரண்டாம் நிலை உற்பத்தியான மாணிக்கக்கல் வெட்டுதல் மற்றும் பட்டை நீட்டலிலும், அதன் மூன்றாம் நிலை வணிகமான மாணிக்கக்கல் வியாபாரத்திலும் முஸ்லிம் மக்கள் இன்னும் அரிக்கத்தை வைத்திருக்கின்றனர்.

ஆனால் இன்றைய காலத்தைப் பொறுத்தமட்டில் முழுமையாக நீங்காத கொரோனாத் தாக்கமும்; மாணிகக்கல் சார் தொழிலின் மீது பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. கொரோனாப் பெருந்தொற்றுக் காலத்தில் விமான நிலையங்கள் மூடப்பட்டதாலும், மாணிக்கக்கல் வியாபாரிகள் இலங்கை வருவதும், வெளிநாட்டுக்குச் செல்வதும் தடைப்பட்டிருந்தது. இதனால் மாணிக்கக்கல் ஏற்றுமதி, இறக்குமதி பணிகளில் சிக்கல் தன்மைகள் ஏற்பட்டன. அத்தோடு அன்றாடம் இந்தத் தொழிலையே நம்பி வாழ்கின்ற குடும்பங்கள் பல தொழிலின்றி காணப்பட்டன. ஒரு சிலருக்கு உரிய வேளையில் மாணிக்கக் கற்கள் கிடைக்காமல் இருப்பது பெரும் அசௌகரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இவ்விடயம் குறித்து இந்தத் தொழிலுடன் தொடர்புடைய அப்பிரதேசவாசிகளில் ஒருவரான எம்.எச்.ஏ.ஸிப்தி முன்னார் இணைச் செயலாளர் கிந்தோட்டை மாணிக்க வியாபாரச் சங்கம் ) கருத்துத் தெரிவிக்கையில், ‘குறுகிய காலத்தில் கொரோனாத் தொற்று நோய்ப் பிரச்சினையால் ஏற்றுமதி, இறக்குமதி செய்ய முடியாமல் வியாபாநிலையம் மந்தகதியில் இருக்கின்றது. எமது வியாபாரம் முன்னேற்றமடைய ஏற்றுமதி, இறக்குமதி செய்யப்படவேண்டும்.

எமது முதலாளிமார்களுக்கு மாணிக்கக் கற்களும் இல்லை . அவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று மாணிக்கக் கற்கள் கொண்டு வருகின்றனர். ஆனால் இந்த நிலைமை முடங்கிப்போய்க் காணப்படுகின்றது. வெளிநாடுகளில் இருந்து வரக்கூடிய மாணிக்கக் கற்களும் எமது நாட்டுக்கு வந்து சேருவதில் தாமதம் ஏற்பட்டிருக்கின்றன. மிகவும் சிரமத்துக்கு மத்தியில் இந்தத் தொழிலை மேற்கொண்டு வருகின்றோம்- எனக் கூறினார். மேலும் இயற்கை அனர்த்தங்கள். வன்முறைகள் மற்றும் மோதல்கள் சில நாடுகளில் ஏற்பட்ட போதிலும் இந்த வியாபாரத்தில் சில ஏற்ற இறக்கங்கள் ஏற்பட்டாலும் சில காலங்களில் அவை நிவர்த்தி செய்யப்பட்டு மீண்டும் இந்த வியாபாரம் சீராக்கப்பட்டுவிடும். ஆயினும், கொரோனா இந்தத் தொழிலில் நீண்ட பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது என்பதை மறுக்கமுடியாது. இக்கொடிய நோயின் தாக்கத்தால் மாணிக் கக்கல் வியாபாரத் தொழிலாளர்கள் ஒரு வரையொருவர் கதைத்து. தொடர்புபட்டு வியாபாரங்களை மேற்கொள்ள முடியாமலும், மாணிக்கக்கல் வியாபாரிகள் ஒன்று கூடி வியாபாரத்தை மேற்கொள்ளும் இடமான பத்தை என்றழைக்கப்படும் இடங்களில் விற்பனைகளை செய்ய முடியாமலும், மாணிக்கக்கற்கள் அதிகமாக பெறக்கூடிய இடங்களுக்குச் சென்று கற்களை வாங்கவோ, விற்கவோ முடியாமல் போனதும், எதிர்ப்பார்த்து நிற்கும் உரிய நேரத்தில் மாணிக்கக்கற்கள் கிடைக்காமல் போனதும் இப்போது பெரும் சவாலாக உள்ளது. இந்த விடயம் குறித்து இத்தொழிலுடன் தொடர்புடைய அப்பிரதேச வாசிகளில் ஒருவரான எம்.டீ.எம், நஸ்ருதீன் (முன்னாள் இணைச் செயலாளர் கிந்தோட்டை மாணிக்க வியாபாரச் சங்கம்) கருத்துத் தெரிவிக்கையில்,

கிந்தோட்டை வாழ்மக்கள் சில வெளிநாட்டு வியாபாரிகளுக்கு விற்பதோடு, இலங்கையிலுள்ள வியாபாரிகளுக்கும் விற்பர். இதனால் அவர்களது வருமானம் அதிகரித்தது. வாழ்க்கையும் செழிப்பாக நகர்ந்தது. ஆனால் முழு உலகையும் வியக்கவைத்த கொரோனாவின் தாக்கத்தால் எமது வியாபாரம் சார்ந்த மாணிக்கக் கற்களை ஏற்றுமதி, இறக்குமதி செய்ய முடியாத நிலைமை ஏற்பட் டது. இந்தத் தொழிலை மேற் கொண்டு வந்தவர்கள் தொழிலை முன்னெடுத்துச் செல்ல முடியாமலும், மாற்றுத் தொழிலை செய்ய முனைந்தாலும் அவற்றையும் ஒழுங்காகச் செய்ய முடியாத நிலையிலேயே இருக்கின்றோம். எனவே, இவ்வாறான சிக்கல்களிலிருந்து கூடிய விரைவில் விடுபட்டு, எமது தொழில் முன்னேற்றமடைய வேண்டும். அரசு இதற்கான ஒத்தாசைகளையும் வழங்க வேண்டும் எனக் குறிப்பிட்டார்.

எதிர்காலத்தில் இத்தொழிலானது மேலும் வளர்ச்சிப்பாதையை நோக்கி நகர்வ தோடு, கிந்தோட்டை வாழ் மக்களின் வாழ் வாதாரமாய் விளங்கும் இத்தொழில் முயற்சியானது பேணப்பட வேண்டும். கொரோனாவின் நிலை நாள்தோறும் இவ்வாறு இருக்கப்போவதில்லை. ஆனால் கிந்தோட்டை வாழ் மக்களின் தொழில் முயற்சியானது மாணிக்கக் கல்லில் நிலைத்து நிற்கவேண்டும். எனவே. சர்வதேச அளவில் வியாபித்துக் காணப்படும் இத்தொழிலானது வளர்ச்சி காண்பதற்கு கொரோனாவும் ஒரு தடையல்ல என்பதை உணர்ந்து பொருத்தமான வழிமுறையினூடாக தொழில் முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும் என்பதே கிந்தோட்டை வாழ் மக்களின் பேரவாவாக உள்ளது.

Rubies on a dark background
Spread the love