இலங்கையில் மற்றொரு கொவிட்-19 அலை ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். சமீபத்திய உருத்திரிபு கொரோனா காரணமாக தொற்றுநோய் மீண்டும் வேகமாகப் பரவலாம் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
புதிய உருத்திரிபு வைரஸில் இருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள நான்காவது கொவிட் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளுமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
புதிய திரிபு வைரஸ் வேகமாகப் பரவக்கூடியது என்று கூறிய அசேல குணவர்தன, 20 வயதுக்கு மேற்பட்டவர்கள் நான்காவது கொவிட்-19 தடுப்பூசியைப் பெறுமாறு வலியுறுத்தினார். தடுப்பூசி போடுவதன் மூலம் வைரஸால் ஏற்படும் கடுமையான பாதிப்பு மற்றும் இறப்புகளைத் தடுக்க முடியும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார். மேலும், 60 வயதுக்கு மேற்பட்ட வர்களும், வெளிநாடு செல்ல எதிர்பார்ப்பவர்களும் இரண்டாவது பூஸ்டர் தடுப்பூசியை பெறுவது அவசியம் என்றார்.