வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் ஐக்கிய நாடுகளின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் ஹன்னா சிங்கர்-ஹம்டியை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் வைத்து சந்தித்தார்.
இக்கலந்துரையாடலின் போது அமைச்சர் பீரிஸ் நாட்டின் தற்போதைய நிலைமை, குறிப்பாக எரிபொருள், உணவு மற்றும் மருந்துப் பொருட்களின் தட்டுப்பாடு தொடர்பில் வதிவிட ஒருங்கிணைப்பாளருக்கு விளக்கமளித்தார். இருதரப்பு மற்றும் பலதரப்பு நன்கொடையாளர்களிடமிருந்து பெறப்படும் மனிதாபிமான உதவிகளுக்கு அவர் ஆழ்ந்த பாராட்டுகளைத் தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகள் சபை மற்றும் அதன் நிறுவனங்களின் மனிதாபிமான உதவியின் தற்போதைய நிலையை வதிவிட ஒருங்கிணைப்பாளர் விளக்கினார். தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஏனைய உதவித் திட்டங்களுக்கும் மேலதிகமாக, இலங்கைக்கு ஐ.நா. வினால் வழங்கப்படும் உடனடி உதவிகளில் மகா பருவத்திற்கான யூரியா, மருந்துப் பொருட்கள், விதைகள் மற்றும் பாடசாலைகளுக்கு உணவு வழங்கும் திட்டம் ஆகியவை உள்ளடங்குவதாக அவர் குறிப்பிட்டார்.
சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சுவார்த்தைகளின் முன்னேற்றம் குறித்தும் அமைச்சர் பீரிஸ் விளக்கமளித்ததுடன், இலங்கையில் கடனை நிலைநிறுத்துவதற்கு சர்வதேச நாணய நிதியத்தால் முன்மொழியப்பட்டுள்ள நடவடிக்கைகளை கருத்தில் கொண்டு அரசாங்கம் புதிய வரவு செலவுத் திட்டத்தைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.