மக்களின் வாழ்க்கைச் சுமையை குறைப்பதற்கு துரித நிவாரணத் திட்டம்- பதில் ஜனாதிபதி ரணில்

பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் வாழ்க்கைச் சுமையை குறைப்பதற்கு எரிபொருள், எரிவாயு மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்கும் துரித நிவாரணத் திட்டமொன்றை ஆரம்பிக்க பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார்.

அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலருடன் இன்று நடைபெற்ற கலந்துரையாடலில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முன்வைக்கப்படவுள்ள நிவாரண வரவு செலவுத் திட்டத்திற்கு வரவு செலவுத் திட்டத்தில் மேலதிக நிதியை பயன்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. எரிபொருள் மற்றும் உரத்தை மிக விரைவில் பெற்றுக்கொடுப்பது தொடர்பிலும் இங்கு கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, அறவழி போராட்டக்காரர்கள் முன்வைத்துள்ள யோசனைகளில் காணப்படும் மக்கள் பேரவை சிறந்த யோசனை என்பதனை ஏற்றுக்கொள்வதாகவும் பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதன்போது தெரிவித்ததாக பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஊழலை ஒழிப்பதற்கு எடுக்கப்படும் செயற்பாடுகள் தொடர்பில் போராட்டக்கார்களுக்கு அறிவிப்பதாகவும் ரணில் விக்ரமசிங்க இதன்போது மேலும் தெரிவித்துள்ளார்.

Spread the love