பதில் ஜனாதிபதி பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் மாற்றீட்டு ஜனாதிபதி (அடுத்துவரும் ஜனாதிபதி)யாக தெரிவு செய்யப்பட்டுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க அறிவித்துள்ளர்.
பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற இரகசிய வாக்கெடுப்பில் 134 வாக்குகளைப் பெற்று பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, மாற்றீட்டு ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இந்த ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவை எதிர்த்து போட்டியிட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான டலஸ் அழகப்பெரும மற்றும் அனுரகுமார திஸாநாயக்க ஆகியோர் போட்டியிட்டனர்.இவர்களை தோற்கடித்து புதிய ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
கடந்த மே மாதம் மக்கள் எதிர்ப்பு காரணமாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ பதவி விலகியதைத் தொடர்ந்து, ரணில் விக்ரமசிங்க பிரதமராக நியமிக்கப்பட்டார்.
அதன் பின்னர், ஜூலை மாதம் மக்கள் எதிர்ப்பு காரணமாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவும் பதவி விலகியதன் பின்னர், ரணில் விக்கிரமசிங்க பதில் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டார்.
இலங்கையின் அரசியலமைப்பின் பிரகாரம், முன்னாள் ஜனாதிபதியின் எஞ்சியுள்ள பதவிக் காலத்தை நிறைவு செய்வதற்கு புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான இரகசிய வாக்கெடுப்பு இன்று (20) பாராளுமன்றத்தில் நடைபெற்றது.
223 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்திருந்ததுடன், 2 பாராளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை. செல்லுபடியான வாக்குகளின் எண்ணிக்கை 219 , செல்லாத வாக்குகள் 4 என அறிவிக்கப்பட்டது.
இதன்மூலம், இதற்கு முன்னர் இரண்டு ஜனாதிபதித் தேர்தல்களிலும், பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலும் தோல்வியடைந்த ரணில் விக்கிரமசிங்க, இன்று இலங்கையின் 8வது நிறைவேற்று ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.