இந்திய கடவுச்சீட்டு பெறுவதில் மோசடி தொடர்பாக இலங்கையர்கள் உட்பட 15 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை பிரஜைகளை உள்ளடக்கிய கடவுச்சீட்டு மோசடி தொடர்பான விசாரணையில் இந்திய பொலிஸார் மற்றும் கடவுச்சீட்டு அதிகாரிகள் உட்பட 41 பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளதாகவும், இது தொடர்பான இறுதி அறிக்கை விரைவில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் எனவும் தமிழக அரசாங்கம் கடந்த ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.
மேலும் இலங்கை பிரஜைகள் சிலர் வெளிநாடு செல்வதற்காக இந்திய கடவுச்சீட்டுகளை பெற முயற்சிப்பதாக கிடைத்த தகவலையடுத்து, தமிழ்நாடு காவல்துறையின் கியூ பிராஞ்ச் மதுரை பிரிவு விசாரணை நடத்தி வந்ததாகவும் இது தொடர்பாக 2019 செப்டம்பரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
போலி ஆவணங்களை சமர்ப்பித்து கடவு சீட்டினை வாங்கியது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் 5 போலிஸ் அதிகாரிகள், 14 கடவுசீட்டு அதிகாரிகள், 2 தபால் துறை ஊழியர்கள் உள்பட 41 பேர் சம்பந்தப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. குறித்த வழக்கு தொடர்பாக மொத்தம் 15 பேர் (நான்கு இலங்கை தமிழர்கள் மற்றும் 11 பயண முகவர்கள்) இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக அப்போதைய காவல் உதவி ஆணையாளர் (உளவுத்துறை) மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய மதுரை ஆட்சியர் இந்த ஆண்டு மே மாதம் ஒப்புதல் அளித்த நிலையில், அந்தந்த திணைக்கள ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறை மற்றும் அஞ்சல் துறைகள் தமது அனுமதியினை வழங்கி உள்ளது.
அதனை தொடர்ந்து 2021 டிசம்பரில் 14 கடவுச்சீட்டு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க மத்திய அரசிடம் அனுமதி கோரப்பட்ட நிலையில், இதுவரையில் எந்த அனுமதியும் பெறப்படவில்லை எனவும், கியூ பிராஞ்ச் விசாரணை முடிந்து 41 பேருக்கு எதிரான இறுதி அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணையில், 124 கடவுச்சீட்டுகளை கைப்பற்றியுள்ளதாகவும் மேலும் 51 பேர் இந்திய கடவுச்சீட்டினைபெற்றிருப்பதாகவும் தெரியவந்துள்ளது. மொத்த 175 கடவுச்சீட்டுக்களில் 28 இலங்கைத் தமிழர்களால் போலி ஆவணங்கள் மூலம் இந்திய கடவுச்சீட்டினை பெற்றுள்ளதாக இந்தியாவின் பல மாநிலங்களில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலும் 30 கடவுச்சீட்டுகள் நிலை என்ன என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது எனவும் மீதமுள்ள 117 பேரில் 116 பேர் இந்திய நாட்டினரைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.