கடந்த மே மாதம் காலி முகத்திடல் கோட்டாகோகம அறவழி போராட்டக்காரர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பான விசாரணைகளின் முன்னேற்றம் குறித்த அறிக்கையை எதிர்வரும் 24 ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே முன்னிலையில் குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் நிறைவு செய்யப்பட்டு, அதன் அறிக்கையை சட்டமா அதிபருக்கு அனுப்பியுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் சார்பில் மன்றில் ஆஜராகிய பிரதி சொலிசிட்டர் ஜெனரல் லக்மினி கிரிஹாகம மன்றுக்கு அறிவித்துள்ளார்.
பிரதி பொலிஸ்மா அதிபர் தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து தீர்மானம் மேற்கொள்வதற்காக அந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த வழக்கு விசாரணை எதிர்வரும் 24 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.