உக்ரேன் ஆயுத உற்பத்தியாளர்களின் பரீட்சைக்களம்?

ரஷ்ய ஆக்கிரமிப்புக்கு எதிராக மக்களைக் காப்பதற்காகவும், ஜனநாயகத்தை மீட்பதற்காகவும் போர் புரிவதாக உக்ரேன் தரப்பிலும், அந்த நாட்டுக்கு ஆதரவாகச் செயற்படும் மேற்குலகின் சார்பிலும் முன்வைக்கப்படும் பிரசாரங்களைப் பொய்ப்பிக்கும் வகையிலான அறிக்கை ஒன்றை சர்வதேச மன்னிப்புச் சபை வெளியிட்டுள்ளது.

‘உக்ரேன்: குடிமக்களைப் பாதிக்கும் உக்ரேனின் போர்த் தந்திரங்கள்” என்ற தலைப்பில் ஆகஸ்ட் 4ஆம் திகதி வெளியிடப்பட்ட அறிக்கையில் சர்வதேச மனிதாபிமானச் சட்டங்களுக்கு முரணாக உக்ரேன் நாட்டுப் படையினர் பல சந்தர்ப்பங்களில் செயற்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.


ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான காலப்பகுதியில் கிழக்கு உக்ரேனின் கார்கிவ், டொன்பாஸ் மற்றும் மைகொலைவ் ஆகிய பிராந்தியங்களில் நடத்தப்பட்ட ஆய்வுகளின் முடிவுகள் இந்த அறிக்கையில் அடங்கியுள்ளன. இந்த ஆய்வுகளில், உக்ரேன் படையினர் பொது மக்கள் வாழும் இடங்களின் அருகாமையில் இருந்து படை நடவடிக்கைகளை மேற்கொண்டது முதல் பாடசாலைகள் மற்றும் மருத்துவமனைகள் உள்ளிட்ட இடங்களில் படைத்தளங்களை பேணி வந்தமையும் கண்டறியப்பட்டுள்ளது.

மருத்துவமனைகளைப் போர் நடவடிக்கைகளுக்குப் பாவிப்பது சர்வதேச மனிதாபிமானச் சட்டங்களுக்கு அமைவாகத் தடை செய்யப்பட்ட விடயம். பாடசாலைகளை படைத்தளங்களாகப் பயன்படுத்துவது சட்டத்துக்கு முரணான விடயமாக இல்லாவிடினும், அவ்வாறு பயன்படுத்துவதால் பொது மக்களுக்குப் பாதிப்பு ஏற்படுமாயின் அது தவிர்க்கப்பட வேண்டும் என்பது கவனத்தில் கொள்ளப்படவில்லை என்பது சர்வதேச மன்னிப்புச் சபையின் குற்றச்சாட்டாக உள்ளது.

இந்தக் காலப்பகுதியில் 5 மருத்துவமனைகள் உக்ரேன் படைகளினால் படைத்தளங்களாகப் பாவிக்கப்பட்டுள்ளன. அது மாத்திரமன்றி மன்னிப்புச்சபையின் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட 29 பாடசாலைகளில் 22 பாடசாலைகள் ஆய்வுவேளையில் படைத்தளங்களாகப் பாவிக்கப்பட்டு வந்துள்ளமை அல்லது முன்னர் பாவிக்கப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது. பாக்முற் என்ற இடத்தில் ஒரு பல்கலைக்கழகம் கூட படைமுகாமாகப் பயன்படுத்தப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.


இது தவிர, 19நகரங்கள் மற்றும் கிராமங்களில் பொது மக்கள் செறிவாக வாழும் இடங்களில் இருந்து ரஷ்யப் படைகள் மீது தாக்குதல்கள் தொடுக்கப்பட்டுள்ளன. இந்த வேளைகளில் இடம்பெற்ற பதில் தாக்குதல்களில் பல பொதுமக்கள் கொல்லப்பட்டமை சாட்சியங்கள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளன. அதிலும் கூட குறித்த இடங்கள் போர்முனையில் இருந்து பல கிலோமீற்றர் தொலைவில் இருந்தமையும், அருகே காடுகள் இருந்த போதிலும், படையினர் அங்கே நிலைகொள்ளாமல் மக்கள் வாழிடங் களின் மத்தியில் இருந்து கொண்டே தாக்குதல்களை நடத்தியுள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது.


பெப்ரவரி 24ஆம் திகதி அதாவது உக்ரேன் மீதான தாக்குதல்களை ரஷ்யா ஆரம்பித்த நாள் முதலாக ரஷ்யப் படைகள் மீது போர்க் குற்றச்சாட்டுகளை உக்ரேனும், மேற்குலகும் தொடர்ச்சியாகத் தெரிவித்து வருவது தெரிந்ததே. இந்தக் குற்றச்சாட்டுகளைத் தொடர்ச்சி யாக மறுதலித்துவரும் ரஷ்யா, தான் வேண் டுமென்றே பொது மக்கள் இலக்குகள் மீது தாக்குதல்களைத் தொடுப்பதில்லை என பதி லளித்து வருகின்றது. அதேவேளை, உக்ரேன் படையினர் குறிப்பாக அவர்களோடு இணைந்து செயற்படும் நவீன நாசிக்கள் ரஷ்யா மீது பழியைப் போடுவதற்காகத் திட்டமிட்டு சில விடயங்களை அரங்கேற்றி வருகின்றனர் என்றும் தொடர்ச்சியாகக் கூறி வருகின்றது. ரஷ்யா, ரஷ்யாவின் இந்தக் கூற்றுகள் ஓரளவு உண்மை என்பதையே தற்போதைய மன்னிப்புச் சபையின் அறிக்கை சுட்டி நிற்கின்றது.

மறுபுறம், அண்மைக் காலமாக ரஷ்ய எதிர்ப்புப் பரப்புரையை அளவுக்கு அதிகமாக மேற்கொண்டுவரும் ஜேர்மனிய ஊடகமான ‘டெர் ஸ்பீகல்’ ஆகஸ்ட் 5ஆம் திகதி வெளியிட்ட செய்தியொன்றில் தமது ஆய்வில் கூட மன்னிப்புச்சபை வெளியிட்ட தகவல்களுக்கான ஆதாரங்கள் உள்ளதாகவும், உக்ரேன் படையினரின் நடவடிக்கைகள் சட்ட அடிப்படையிலான கேள்விகளை எழுப்புவதாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. உலக அரங்கில் ரஷ்யாவை படுமோசமான வில்லனாகவும், உக்ரேனை மனிதாபிமானம் மிகுந்த சிறந்த கதாநாயகனாகவும் காட்சிப்படுத்தி வந்த மேற்குலகிற்கும், அதன் ஊடகங்களுக்கும் மன்னிப்புச்சபையின் அறிக்கை பேரிடியாக அமைந்திருப்பது மறுப்பதற்கில்லை. சில ஊடகங்கள் வழமை போன்று இந்த அறிக்கையைக் கண்டுகொள்ளவேயில்லை. அதிலொன்றும் ஆச்சரியம் இருக்க முடியாது.

அதேவேளை, உக்ரேன் ஜனாதிபதி விளாடிமிர் ஷெலன்ஸ்கி, ‘மன்னிப்புச் சபையின் அறிக்கை ஆக்கிரமிப்பாளரை விட்டுவிட்டு பாதிக்கப்படுவோர் மீது குற்றம் சுமத்துவது போல உள்ளது” என தனது வழக்கமான பாணியில் தெரிவித்துள்ளார். மறுபுறம், சர்வதேச மன்னிப்புச் சபையின் உக்ரேன் நாட்டுக்கான பிரதிநிதியாகப் பணியாற்றி வந்த ஒக்சானா பொகல்சுக்பதவி விலகலை அறி வித்துள்ளார். இது தொடர்பில் அவர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில், குறித்த அறிக்கை ரஷ்யாவின் பரப்புரையை ஒப்புவிப் பது போல் உள்ளது எனத் தெரிவித்து உள்ளார். இந்த ஆய்வு நடப்பது தொடர்பில் முன்னர்ஒருமுறை ஊடகங்களுக்குச் செய்தி வழங் கியிருந்த அவர், உக்ரேனில் நடைபெறும் ரஷ்ய மற்றும் உக்ரேன் படைகளின் போர்க்குற்றங்கள் தொடர்பிலேயே தாம் ஆய்வு நடத்தி வருவதாகக் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


அது மாத்திரமன்றி, இந்த அறிக்கை வெளிவருவதைத் தடுத்துவிட அவர் இறுதிநேரம் வரை முயன்றதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த ஜூன் மாதத்தில் உக்ரேன் போர் தொடர்பில் மன்னிப்புச்சபை வெளியிட்டிருந்த அறிக்கையில் ரஷ்யப் படைகள் மீது குற்றங்கள் சுமத்தப்பட்டிருந்தன. பொதுமக்களுக்கு இழப்பை ஏற்படுத்தும் தாக்குதல்கள் உட்பட, தடை செய்யப்பட்ட கொத்தணிக் குண்டுகளைப் பாவித்ததாகவும் ரஷ்யப் படைகள் மீது சர்வதேச மன்னிப்புச்சபை குற்றம் சுமத்தியிருந்தது.


அப்போது சர்வதேச ஊடகங்கள் அந்த அறிக்கையைத் தமது பரப்புரைக்குத் தாராளமாகவே பயன்படுத்தியிருந்தன. எனினும் தற்போதைய அறிக்கை வெளிப்படையான மற்றும் மறைமுகமான கண்டனங்களுக்கு ஆளாகியிருப்பதைப் பார்க்க முடிகின்றது. இதன் விளைவாக தனது அறிக்கை தொடர்பில் வருத்தம் தெரிவிக்கும் நிலைக்கு சர்வதேச மன்னிப்புச் சபை தள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம் அக்னஸ் கல்லமார்ட், தங்கள் அறிக்கையின் விளைவாக ஏற்பட்டுள்ள கவலை மற்றும் துன்பம் என்பவற்றுக்காக வருந்துவதாகத் தெரிவித்துள்ளார். எனினும் தமது அறிக்கையை மீளப்பெறப்போவதில்லை என தெரிவித்துள்ள அவர், உக்ரேன் படையினரின் செயற்பாடுகள் ரஷ்யப் படையினரின் மீறல்களை நியாயப்படுத்துவதாக ஆகாது என்றும் கூறியுள்ளார். என்னதான் இருந்தாலும், மன்னிப்புச் சபையின் அறிக்கை நடப்பு நிலவரங்களை ஓரளவுக்கேனும் வெளிப்படுத்தி உள்ளமையை ஏற்றுக் கொண்டேயாக வேண்டும்.

வெளியாகியுள்ள தகவல்களின் பிரகாரம், உக்ரேன் போரில் 5,000 வரையான பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், சுமார் 7,000 வரையானோர் காயமடைந்தும் உள்ளனர். இவர்கள் ரஷ்யப் படையினரின் தாக்குதல்களால் உயிரிழந்தோ, காயமடைந்தோ இருந்தாலும் இதற்கான முழுப்பொறுப்பையும் ரஷ்யப் படைகள் மீது மட்டும் சுமத் துவது நியாயம் இல்லாதது என்பதையே மன்னிப்புச்சபையின் அறிக்கை உணர்த்துகின்றது.


சர்வதேச மன்னிப்புச் சபை ஒன்றும் முற்று முழுதாக நீதியின் அச்சில் செயற்படும் ஒரு அமைப்பு அல்ல என்பதை ஈழத் தமிழர்கள் நன்கு அறிவார்கள். மூன்று தசாப்த காலப்போர் தொடர்பில் மன்னிப்புச் சபை உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் எவ்வாறு நடந்து கொண்டன என்பது தமிழ் மக்களின் மனதில் இன்றும் பசுமையாக உள்ளன. ஆனாலும், தமது வழக்கமான பாதையில் இருந்து விலகி இதுபோன்ற ஒரு அறிக்கையை வெளியிட்டு உண்மை நிலையை உலகிற்குக் காட்டியமைக்காக அந்த அமைப்பைப் பாராட்டாமல் இருக்க முடியாது.

உக்ரேன் பாதுகாப்பு அமைச்சர் ஒலக்ஸி றெஸ்னிக்கோவ், தமது நாடு மேற்குலக ஆயுத உற்பத்தியாளர்களின் பரீட்சைக் களமாக மாறியிருப்பதாக அண்மையில் கூறியிருந்தார். அவரது கூற்றின் உண்மைத் தன்மையைப் புரிந்து கொள்ள சர்வதேச மன்னிப்புச் சபையின் அறிக்கை உதவியாக இருக்கின்றது.

credit to:

Spread the love