வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காக சாரதி அனுமதிப்பத்திரத்திற்கு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையல் எதிர்வரும் காலங்களில் சாரதி அனுமதி பத்திரம் மற்றும் வாகன கைமாற்றங்கள் உள்ளிட்ட அனைத்து கட்டணங்களையும் மறுசீரமைப்பு செய்ய மோட்டார் போக்குவரத்து திணைக்களம் அனுமதி கோரியுள்ளது.
திணைக்களம் அதன் அனைத்து சேவைகளுக்கான கட்டணங்களை மறுசீரமைப்பதற்கு அமைச்சரின் அங்கீகாரத்தை பெற்றுள்ளது. இது விரைவில் வர்த்தமானியில் வெளியிடப்படும்.
2009ஆம் ஆண்டு இறுதித் திருத்தம் செய்யப்பட்டது. 13 வருடங்களின் பின்னர் இந்தக் கட்டணங்களுக்கான மறுசீரமைப்பு இடம்பெறவுள்ளதாக ஆணையாளர் வசந்த என். ஆரியரத்ன நேற்று தெரிவித்துள்ளார்.
போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தனவின் அனுமதி கிடைத்துள்ளதாகவும், திருத்தங்கள் திறைசேரிக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
அரசாங்கத் துறைகள் பல வழங்கும் சேவைகளுக்கான கட்டணங்களுடன் ஒப்பிடுகையில், எங்கள் சேவைகளுக்கான கட்டணம் மிகவும் குறைவு, புதிய சாரதி அனுமதி பத்திரத்திற்கு ஆயிரத்து 700 மற்றும் புதுப்பிக்காததற்கு ஆண்டுக்கு ரூ.250 மட்டுமே அபராதம் விதிக்கப்படுவதாகவும் ஆணையாளர் நாயகம் திரு.அரியரத்னா தெரிவித்துள்ளார்.
மேலும் கருத்து தெரிவிக்கையில் கடந்த மார்ச் மாதம் முதல், டொலர்கள் பற்றாக்குறை காரணமாக, பாஸ்போர்ட் மற்றும் முன்பதிவு செய்யப்பட்ட விமான டிக்கெட் போன்றவற்றுடன், வெளிநாட்டில் பணிபுரிய செல்லும் பணியாளர்களுக்கு மட்டுமே அச்சிடப்பட்ட சாரதி அனுமதி பத்திரம் வழங்கப்பட்டுவருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டிருந்தார்.
அத்துடன் மற்றைய புதிய மற்றும் புதுப்பித்தலுக்கு விண்ணப்பித்திருந்த விண்ணப்பதாரர்களுக்கு தகமைகள் பரிசீலிக்கப்பட்டு தற்காலிக அனுமதியினை காகிதம் மூலமே அங்கீகாரம் வழங்கப்பட்டதுடன் எதிர்வரும் காலங்களில் டொலர் பற்றாக்குறை பிரச்சினைக்கு தீர்வு கிடைத்தவுடன் ஒஸ்ரியாவிலிருந்து தருவிக்கப்படும் புதிய அட்டைகளை வழங்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
மேலும் வேரஹரவில் உள்ள DMT சாரதி அனுமதிப்பத்திரத்தின் தலைமை அலுவலகம் மற்றும் அனுராதபுரம், கம்பஹா, ஹம்பாந்தோட்டை, யாழ்ப்பாணம், களுத்துறை, கண்டி, குருநாகல் மற்றும் மொனராகலை ஆகிய எட்டு மாவட்ட அலுவலகங்களில் இருந்து இந்த வருடம் மார்ச் மாதம் முதல் வெளிநாட்டில் வேலை தேடும் சுமார் 60 ஆயிரம் விண்ணப்பதாரர்களுக்கு வழக்கமான பிளாஸ்டிக் சாரதி அனுமதி அட்டை வழங்கப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.