சர்வதேசத்தின் கடும் எதிர்ப்புக்கு மத்தியிலும், அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே உள்ளிட்ட மூவரையும் 90 நாள் தடுப்புக்காவலில் வைத்து விசாரிப்பதற்கு பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அனுமதி வழங்கியுள்ளார். கடந்த 19ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்த நிலையில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் 72 மணித்தியாலங்கள் விசாரணைகளுக்காக தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.
கைது செய்யப்பட்ட அனைத்து பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே, ஹஷான் ஜீவந்த குணதிலக்க மற்றும் கல்வெவ சிறிதம்ம தேரர் ஆகியோரை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தொடர்ந்தும் தடுத்துவைத்து விசாரணை செய்வதற்கான உத்தரவை பெறுவதற்கு பொலிஸார் பாதுகாப்பு அமைச்சின் அனுமதியை கோரியிருந்தனர். இவர்களது கைது தொடர்பாக சர்வதேச மன்னிப்புச் சபை உட்பட பல்வேறு சர்வதேச மனித உரிமை அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பாதுகாப்பாளர்கள் தொடர்பான விசேட அறிக்கையாளர் மேரி லோலர், அவர்களை தடுத்து வைக்கும் உத்தரவுகளில் கையெழுத்திட வேண்டாம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் வலியுறுத்தியிருந்தார். எனினும், மேற்படி மூவரையும் 90 நாள் தடுப்புக் காவலில் வைத்து விசாரிப்பதற்கு, பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று அனுமதி வழங்கியுள்ளார்.
முன்னதாக பல்கலைக்கழகங்களுக்கிடையிலான மாணவர் சம்மேளனத்தின் ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகே உள்ளிட்ட இருவரை பயங்கரவாதச் செயலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் பட்சத்தில் அவர்களை பயங்கரவாத விசாரணை பிரிவிடம் ஒப்படைக்குமாறு பொலிஸ்மா அதிபர் பணிப்புரை விடுத்திருந்தார். பல்கலைக்கழகங்களுக்கிடையிலான மாணவர் சம்மேளனத்தின் ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகே மற்றும் ஏனைய இருவர் தொடர்பிலான விசாரணைகள் பொலிஸ்மா அதிபரின் பணிப்புரையின் பேரில் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
மேலும் இவர்கள் அரச விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டார்களா அல்லது பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டார்களா என்பது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு பணிப்புரை விடுக்கப்பட்டது. கடந்த 18 மற்றும் 19 ஆம் திகதிகளில் கொழும்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட அரசாங்கத்துக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது 19 பேர் கைது செய்யப்பட்டதுடன் இவர்களில் ஒருவரை 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டதுடன் 15 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
வசந்த முதலிகே, கல்வெவ சிறிதம்ம தேரர் மற்றும் ஹஷான் குணதிலக்க ஆகியோரை குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது பயங்கரவாத விசாரணை பிரிவிடம் ஒப்படைக்குமாறு பொலிஸ்மா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளார். மார்ச் 31 ஆம் திகதி முதல் காலி முகத்திடலில் 123 நாட்கள் இடம் பெற்ற போராட்ட காலப்பகுதியில் ஏற்பட்டவன் முறைகள் மற்றும் கலவரங்கள் தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட் டுள்ளன.