இலங்கையில் இருக்கும் இந்திய குடிமக்கள் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருக்குமாறு இந்திய வெளியுறவு அமைச்சு நேற்று வியாழக்கிழமை அறிவுறுத்தியுள்ளது. புதுடெல்லியில் நேற்று செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய வெளியுறவுத்துறையின் பேச்சாளர் அரிந்தம் பாக்சி இந்த அறிவுறுத்தலை விடுத்தார். இலங்கையில் இந்தியர்களின் பாதுகாப்பை பாதிக்கும் சம்பவங்கள் குறித்து இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம் இலங்கையில் உள்ள உள்ளூர் அதிகாரிகளுடன் தொடர்பில் உள்ளது. இது தொடர்பாக இந்திய குடிமக்களுக்கு வழிகாட்டுதலை வழங்கியுள்ளதாக பாக்சி தெரிவித்துள்ளார்.
இந்திய குடிமக்கள் இலங்கையில் இருக்கும்போது கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருக்கவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். இலங்கைக்கான சுற்றுலாப் பயணிகளின் மிகப்பெரிய ஆதாரமாக இந்தியா இன்னும் உள்ளது. இந்தநிலையில் அங்குள்ள அனைத்து இந்தியர்களுக்கும் அல்லது அங்கு செல்ல நினைப்பவர்களுக்கும் பொதுவான வழி காட்டுதலாகவே இந்த எச்சரிக்கை இருக்கும் என்று பாக்சி குறிப்பிட்டார்.