இந்தியாவின் அதானி குழுமம் மற்றும் அதானி அறக்கட்டளையின் நிறுவனரும், தலைவருமான கௌதம் அதானி உலகப் பணக்காரர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்துக்கு முன்னேறியுள்ளார். ஆசியாவில் இருந்து ஒருவர் உலகப்பணக்காரர் பட்டியலில் மூன்றாவது இடத்துக்கு வருவது இதுவே முதல் முறையாகும். 137.4 பில்லியன் சொத்து மதிப்புடன் பிரான்சின் பெர்னார்ட் அர்னோல்ட்டை பின்னுக்குத் தள்ளி அதானி மூன்றாம் இடம் பிடித்துள்ளார்.
உலகப் பெரும் செல்வந்தர்கள் பட்டியலில் முதலிடத்தில் டெஸ்லா நிறுவனத்தின் உரிமையாளர் எலோன் மஸ்க், இரண்டாவது இடத்தில் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் ஆகியோர் உள்ளனர். 60 வயதான அதானி, கடந்த சில ஆண்டுகளாக தனது நிலக்கரி – துறைமுக கூட்டு நிறுவனத்தை விரிவுபடுத்தினார். தரவு மையங்கள் முதல் சிமெந்து , ஊடகம் என பல துறைகளில் முதலீடுகளை விரிவுபடுத்தினார்.
அதானி குழுமம் இப்போது இந்தியாவின் மிகப் பெரிய தனியார்துறை துறைமுகம் மற்றும் விமான நிலையம், நகர-எரிவாயு விநியோகம் மற்றும் நிலக்கரி சுரங்கம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. அவுஸ்திரேலியாவில் உள்ள அதன் கார்மைக்கேல் சுரங்கம் சுற்றுச் சூழலாளர்களால் விமர்சிக்கப்பட்டாலும், நவம்பர் மாதம் 70 பில்லியன் டொலர்களை பசுமை ஆற்றலில் முதலீடு செய்து உலகின் மிகப்பெரிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியாளராகமாற உறுதியளித்தது. இலங்கையிலும் காற்றாலை , மின் உற்பத்தித்திட்டத்தில் அதானி நிறுவனம் முதலீடு செய்யவுள்ளது.