மின்சார வாகன இறக்குமதி அனுமதிப் பத்திரங்களை பெறுவது தொடர்பான தகவல்களை பெற்றுக் கொள்வதற்காக மூன்று தொலைபேசி இலக்கங்களை தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன்படி, 0773 039 034 அல்லது 0112 368 175 என்ற தொலைபேசி இலக்கத்திலோ அல்லது 0112 582 447 என்ற அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் (கட்டுப்பாட்டு பிரிவு) திரு.பிரதாபோத காகொட ஆராச்சிக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி தேவையான தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அறிவித்துள்ளது.
புலம்பெயர் தொழிலாளர்கள் உத்தியோகபூர்வ வழிகளில் நாட்டிற்கு அனுப்பும் பணத்தின் அடிப்படையில் மின்சார வாகனத்தை இறக்குமதி செய்வதற்கு தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார அண்மையில் அமைச்சரவையின் அனுமதியைப் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதன்படி, 2022 மே 1 தொடக்கம் 2023 ஏப்ரல் 30 வரை உத்தியோகபூர்வ முறைகளினூடாக 3000 அமெரிக்க டொலர்களுக்கு மேல் அனுப்பிய புலம்பெயர்ந்த தொழிலாளிக்கு, அனுப்பப்பட்ட தொகையை 50 சதவீதம் குறைவான CIF மதிப்புள்ள மின்சார மோட்டார் சைக்கிளை இறக்குமதி செய்வதற்கான உரிமம் வழங்கப்படும் எனவும் குறிப்பிட்டு இருந்தார்.
இதற்கிடையில், 2022 மே 1 தொடக்கம் 2022 டிசம்பர் 31 வரை 20 ஆயிரம் அமெரிக்க டொலர்களுக்கு மேல் பரிமாற்றம் செய்தவர்களுக்கு மின்சார காரை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்படும் எனவும் தெரிவித்திருந்தார்.
அதன்படி, மின்சார கார், டபுள் கேப், வேன் அல்லது டிப்பர் ட்ரக் போன்றவற்றை இறக்குமதி செய்வதற்கான வாய்ப்பு வழங்கப்படும் எனவும் கூறியுள்ளார்.
உரிய வாகன இறக்குமதி அனுமதிப்பத்திரங்களை பெறுவதற்கான விண்ணப்பங்கள் தற்போது தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் இணையத்தளத்திலும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் (SLBFE) இணையத்தளத்திலும் வெளியிடப்பட்டுள்ளன.
விண்ணப்பங்களை பூர்த்தி செய்து உரிய அனைத்து ஆவணங்களுடன் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சிடம் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.