சர்வதேச நாணய நிதியத்தின் (ஐ.எம்.எப்.) நிபந்தனைக்கமைய தேசிய கடன் மறுசீரமைக்கப்பட்டால் வங்கி கட்டமைப்பு முழுமையாக பாதிக்கப்படும். அரச வங்கி கட்டமைப்பு பாதிக்கப்பட்டால் ஊழியர் நம்பிக்கை நிதியம், மற்றும் ஊழியர் சேமலாப நிதியம் பாதிக்கப்படும். மக்களின் சேமிப்புக்கு பாதிப்பு ஏற்பட்டால் நாட்டில் பாரிய மக்கள் போராட்டம் வெடிக்கும். அதனை பாராளுமன்றத்தினால் கூட கட்டுப்படுத்த முடியாது என எதிர்க்கட்சி எம்.பி.யான பாட்டலி சம்பிக்க ரணவக்க எச்சரித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற தேசிய சபை மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்,
நாடு வங்குரோத்து அடைந்துள்ள நிலையில் தேசிய சபை ஊடாக சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கான நம்பிக்கையை பெற்றுக்கொள்ள கவனம் செலுத்தப்பட்டுள்ளது. பொருளாதார பாதிப்பினால் தேசிய தொழிற்துறையினர் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.பொருளாதார நெருக்கடிக்கு பாராளுமன்றத்தின் ஊடாக மாத்திரமே தீர்வு காண முடியும் என்பதை பலமுறை வலியுறுத்தியுள்ளேன். தேசிய சபையின் சகல அரசியல் கட்சிகளும் அங்கம் வகிக்கும் வாய்ப்பு உள்ளதால் தேசிய சபைக்கு ஒத்துழைப்பு வழங்குவேன்.
நாட்டின் பொருளாதார நிலைமை குறித்து சர்வதேச அமைப்புக்கள் வெளியிட்டுள்ள அறிக்கை தொடர்பில் விசேட கவனம் செலுத்த வேண்டும்.நிறைவடைந்துள்ள காலாண்டுகளில் நாட்டின் பொருளாதார நிலைமை வீழ்ச்சியடைந்துள்ளதுடன் மிகுதி காலாண்டுகளிலும் பொருளாதார பாதிப்பு மேலும் தீவிரமடையும் என எதிர்வு கூறியுள்ளன. எரிபொருள் மற்றும் எரிவாயு தட்டுப்பாட்டுக்கு தீர்வு கண்டுவிட்டோம் என அரசாங்கம் குறிப்பிடுவதுதவறு. நாட்டு மக்கள் எரிபொருள் உள்ளிட்டஅத்தியாவசிய தேவை பயன்பாட்டை குறைத்துக் கொண்டார்கள். மின்சார பாவனை 20 சதவீதத்தால் குறைவடைந்துள்ளது. எரிபொருள் மற்றும் மின்சாரத்துக்கான மக்களின் பாவனையின் கேள்வி குறைவடைந்துள்ளமை சிறு மற்றும் நடுத்தர தொழிற்துறையின் பாதிப்பை எடுத்துக்காட்டுகிறது. சர்வதேச நாணய நிதியத்தின் உத்தியோகத்தர் மட்ட இணக்கப்பாட்டின் நிபந்தனைகள் உணர்வுபூர்வமானது என குறிப்பிடப்படுகிறது. அரசாங்கம் விரும்பினாலும், விரும்பாவிடினும் நாணய நிதியத்தின் நிபந்தனைகளை நிச்சயம் நடைமுறைப்படுத்த நேரிடும்.