ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிர்வாக சபையின் 55 ஆவது வருடாந்த மாநாடு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் பிலிப்பைன்ஸின் மணிலா நகரில் நேற்று நடைபெற்றது.
கொரோனா தொற்று நிலைமைக்கு பின்னரான உலகின் காலநிலை மாற்றத்திற்கு அமைய, பசுமையான பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதை தொனிப்பொருளாகக் கொண்டு இம்முறை மாநாடு நடைபெறுகின்றது.
மணிலா நகரிலுள்ள ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைமையகத்தில் நடைபெறும் இந்த மாநாட்டில், வங்கியின் நிர்வாக சபையின் உறுப்பினர்கள் உள்ளிட்ட 68 நாடுகளின் இராஜதந்திரிகள் பங்கேற்றுள்ளனர்.
இதேவேளை, கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் நாட்டின் கடன் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்திக்கொள்வதற்கு இலங்கை கடும் பிரயத்தனம் மேற்கொள்வதாக ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஆளுநர்கள் குழுவின் வர்த்தக அமர்வின் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த முயற்சிக்கு இலங்கையின் கடன் வழங்குநர்களும் கடன் பங்குதாரர்களும் ஆதரவளிப்பார்கள் என ஜனாதிபதி கூறியுள்ளார். மாநாட்டில் கலந்துகொள்வதற்கு முன்னதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி Ferdinand R. Marcos-ஐ மணிலாவில் சந்தித்தார்.
ஆசிய பிராந்திய ஒத்துழைப்பை மேம்படுத்துவதன் மூலம் இலங்கைக்கும் பிலிப்பைன்ஸுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை முன் நகர்த்த நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி இதன்போது கூறியுள்ளார்.