இலங்கை தொடர்பில் ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் நேற்று நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை இலங்கை அரசு உடனடியாக நிராகரித்துள்ளது. இந்தத் தீர்மானத்தில் ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் பொறுப்புக்களுக்கு அப்பாற்பட்ட விடயங்கள் உள்ளடக்கப்பட் டுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் நேற்று இடம்பெற்ற இலங்கை தொடர்பான தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்புக்கு முன்னர் இடம் பெற்ற ஊடாடல் பொது நிகழ்வில் கருத்து வெளியிட்ட அலி சப்ரி, போர்க் குற்றச்சாட்டுக்களுக்கு உள்நாட்டு பொறியின் கீழ் தீர்வு காண எதிர்பார்த்துள்ளதாக கூறினார். இறையாண்மை கொண்டதொரு நாட்டில் சர்வதேச தலையீடுகள் அவசியமற்றது. இலங்கை மீதான குற்றச்சாட்டுகளை சர்வதேச நீதிமன்றத்துக்கு கொண்டுசெல்ல முடியாது.உள்நாட்டு பொறிமுறை யின் கீழ் தீர்வுகாண்பதே பொருத்த மானது என்றும் அவர் கூறினார்.
இலங்கை தொடர்பில் மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது வழக்கமான அமர்வில் முன்வைக்கப்பட்ட51/5 என்ற இலங்கையில் நல்லிணக்கம்,பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கான தீர்மானத்தை நிராகரிக்குமாறு அமைச்சர் அலி சப்ரி உறுப்பு நாடுகளுக்கு அழைப்பு விடுத்தார்.