இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக பொறுப்புக்கூறலை செய்து நீதியை நிலைநாட்டுவதற்காக, ஐ.நா மனித உரிமைகள் பேரவையும் சர்வதேச நாடுகளும் காலக்கெடுவை விதிக்க வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 51/1 தீர்மானத்தை வரவேற்பதாக, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில், இலங்கையின் மனித உரிமைகள், நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலை ஊக்குவித்தல் என்ற தலைப்பில் பிரித்தானியா தலைமையிலான இணை அனுசரணை நாடுகளால் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பில் அவர் வீரகேசரி பத்திரிகைக்கு பிரத்தியேக செவ்வியொன்றை வழங்கியுள்ளார்.
இலங்கை அரசாங்கம் ஐ.நாவிலும் சர்வதேச மன்றங்களிலும் பொறுப்புக்கூறலை செய்வதாகவும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கிலும் அரசியல் தீர்வை காண்பதாகவும் வாக்குறுதிகளை அளித்துள்ளதாக இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். எனினும், தற்போது வரையில் அந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது இலங்கை அரசாங்கத்தின் அபிலாஷையையும் பழக்கத்தையும் வௌிப்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ள இரா.சம்பந்தன், இந்த நிலை தொடர்ந்தும் நீடிப்பதற்கு சர்வதேச சமூகம் அனுமதியளிக்கக்கூடாது என வலியுறுத்தியுள்ளார்.
ஐ.நா மனித உரிமைகள் பேரவை உள்ளிட்ட சர்வதேச நாடுகள் இலங்கை அரசாங்கத்திற்கு பொறுப்புக்கூறலை செய்வதற்கான குறிப்பிட்ட காலக்கெடுவை வழங்க வேண்டும் எனவும் இதன் மூலமாக இலங்கை அரசாங்கத்தின் பொறுப்புக்கூறலுக்கான செயலூக்கத்தினை கண்டறிய முடியும் எனவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.