பிரேசிலில் வெற்றிபெறப்போவது ஜனநாயகமா? சர்வாதிகாரமா?

உலகின் ஐந்தாவது பெரிய நாடான பிரேசிலில் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட 11 வேட்பாளர்களில் எவருமே ஐம்பது சதவீதத்துக்கு மேல் வாக்குகளைப் பெற்றிராத நிலையில் இரண்டாவது சுற்று எதிர்வரும் 30ஆம் திகதி நடைபெறவுள்ளது. பிரேசில் தேர்தல் விதிமுறைகளின் பிரகாரம் ஜனாதிபதி தேர்தல் 4 ஆண்டுகளுக்கு ஒரு தடவை, ஒக்டோபர் மாத முதலாவது ஞாயிற்றுக்கிழமையிலும், இரண்டாவது சுற்று மாத இறுதி ஞாயிற்றுக்கிழமையிலும் நடைபெறுவது வழக்கம்.


தேர்தலுக்கு முந்திய கருத்துக் கணிப்புகள் முன்னாள் ஜனாதிபதியும் தொழிலாளர் கட்சிக் கூட்டணியின் வேட்பாளருமான லூலா டா சில்வா முதல் சுற்றிலேயே நடப்பு ஜனாதிபதி ஜாயர் பொல் சொனரோவை இலகுவாகத் தோற்கடித்து வெற்றி பெறுவார் என்று எதிர்வு கூறியிருந்த போதிலும் அவ்வாறு நிகழவில்லை ,அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளில் 48.43 சதவீத வாக்குகளையே டா சில்வாவால் பெற முடிந்தது. அதேவேளை, கருத்துக் கணிப்புகளில் 14 சதவீதம் வரை பின்தங்கி இருப்பதாகக் கணிக்கப்பட்டிருந்த பொல்சொனரோ 43.2 சதவீதமான வாக்குகளைப் பெற்று கருத்துக் கணிப்புகளைப் பொய்யாக்கினார். 37 ஆண்டுகளுக்கு முன்னர் இராணுவ சர்வாதிகார ஆட்சியில் இருந்து விடுபட்ட பிரேசிலைப் பொறுத்தவரை கடந்த 24 ஆண்டுகளாக நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல்களில் எந்தவொரு போட்டியாளரும் முதல் சுற்றில் வெற்றிபெற்ற வரலாறு இல்லை.


2003 முதல் 2010 வரை இரண்டு தடவைகள் ஜனாதிபதியாகப் பதவி வகித்த கூட, பெருமளவு மக்கள் செல்வாக்கு பெற்றவராக இருந்த போதிலும் அவரால் முதல் சுற்றிலேயே வெற்றிபெற முடியாமல் போயிருந்தமை குறிப்பிடத்தக்கது. முதலிரண்டு தடவைகளிலும் இரண்டாவது சுற்றில் இலகுவான வெற்றியைப் பெற்றிருந்த டா சில்வா, தற்போது மூன்றாவது முறையும் வெற்றி பெறுவாரா அல்லது, வெறும் 5.2 சதவீதமான வாக்குகளிலேயே தனது வெற்றியைப் பறிகொடுப்பாரா என்ற கேள்வி பரவலாக எழுப்பப்படுகின்றது. ஒரு சாதாரண இரும்பாலைத் தொழிலாளியாகப் பணியாற்றி அரசியலில் பிரவேசித்த டா சில்வா இன்றுவரை பிரேசில் நாட்டு மக்களின் பெரு விருப்புக்குரிய ஒரு தலைவராக உள்ளார்.


2002 மற்றும் 2006 தேர்தல்களில் வெற்றிபெற்று அடுத்தடுத்து ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த அவர், அரசியலமைப்பின் பிரகாரம் மூன்றாவது தடவையும் தொடர்ந்து போட்டியிட முடியாத நிலையில் தனது தோழியான டில்மா ரூசேவ் என்பவரைப் போட்டியில் நிறுத்தி வெற்றிபெற வைத்தார். 2018 தேர்தலில் அவர் போட்டியிட முடியாத சூழல் உருவான நிலையிலேயே நடப்பு அரசியல் தலைவரான பொல்சொனரோ வெற்றி பெற்றார். தனது பதவிக் காலத்தில் ஊழல் புரிந்தார் என்ற குற்றச்சாட்டில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டு இருந்த நிலையிலேயே அவர் போட்டியிடுவதில் இருந்து தவிர்க்கப்பட்டார்.


அன்றைய காலகட்டத்தில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்புகளிலும் டா சில்வாவே அதிக செல்வாக்குப் பெற்றவராக இருந்தார் என்பது நினைவில் கொள்ளத்தக்கது. தனக்கு எதிரான வழக்கு அரசியல் அடிப்படையில் திட்டமிடப்பட்ட போலி வழக்கு எனத் தொடர்ச்சியாக அவர்கூறி வந்த நிலையில் 19 மாத சிறைவாசத்தின் பின்னர் அவரின் வழக்கு நிராகரிக்கப்பட்டு அவர் விடுதலைசெய்யப்பட்டார். இராணுவத்தில் கெப்டன் தர அதிகாரியாகப் பணியாற்றி, பதவி துறந்த நீண்டநாள் அரசியல்வாதியான பொல்சொனரோ, தீவிர வலதுசாரிக் கருத்துக்களைக் கொண்டவர். ‘பிரேசில் நாட்டு ட்ரம்ப்’ என்று விளிக்கப்படும் அவர் ஏடாகூடமாகக் கருத்துக்களைப் வெளியிடுவதில் பெயர் போனவர்.

அண்மைக் காலம் வரை, தேர்தலில் தோற்கும் நிலை உருவானால் தேர்தல் முடிவுகளை ஏற்றுக் கொள்ள மாட்டேன் எனப் பகிரங்கமாகவே கருத்துக்களை வெளியிட்டு வந்தவர். தென் அமெரிக்க நாடுகளில் இடதுசாரிக் கருத்துக்களைக் கொண்டவர்கள் ஜனாதிபதியாகப் பதவியேற்கும் போக்கு அண்மைக் காலமாகத் தொடர்ந்து வருகின்றது. அதன் நீட்சியாக பிரேசிலிலும் அதேபோன்ற ஒருவர் பதவிக்கு வருவார் என்ற எதிர்பார்ப்பு நிலவியதை மறுப்பதற்கில்லை. அது இலகுவாக நிகழ்ந்து விடும் என்ற எதிர்பார்ப்பிலேயே தற்போது தாமதம் ஏற்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் டா சில்வாவே முன்னிலை வகித்தாலும் இரண்டாவது சுற்றில் அவரது வெற்றி இலகுவாக இருக்கப் போவதில்லை என்பதையே கள நிலவரம் உணர்த்துகிறது.

பெரும்பாலான தென் அமெரிக்க நாடுகளைப் போலவே செல்வந்தர்களுக்கும், ஏழைகளுக்குமான இடைவெளி பிரேசிலிலும் மிக அகன்றதாகவும், ஆழமானதாகவுமே உள்ளது. டா சில்வா சார்ந்த தொழிலாளர் கட்சியின் சார்பில் முன்வைக்கப்பட்டுள்ள கொள்கைகள் வறிய, விளிம்புநிலை மக்களின் வாழ்வில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவதாகவும், பழங்குடி மக்களின் நலன் சார்ந்ததாகவும், சூழல் பாதுகாப்பை அடிப்படையாகக் கொண்டதாகவும் உள்ளதை அவதானிக்க முடிகின்றது.


பொல்சொனரோ சார்பில் முன்வைக்கப்படும் கொள்கைகளோ நாட்டின் மேட்டுக் குடியினரின் நலன்களையும் பன்னாட்டு பெரு வணிக நிறுவனங்களின் நலன்களையும் பிரதிநிதித்துவப்படுத்துபவையாக உள்ளன. அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பெற்றோலிய நிறுவனத்தைத் தனியார் மயமாக்குதல், அமேசன் பிராந்தியத்தில் மேலதிக சுரங்க நடவடிக்கைகளை ஊக்குவித்தல், துப்பாக்கிப் பாவனைச் சட்டங்களை இலகுவாக்குதல் என்பவை அவரின் கொள்கைகளாக உள்ளன. மேற்படி கொள்கைகளை அடிப்படையாக வைத்தே வேட்பாளர்கள் இருவரும் எந்த வர்க்கத்தைப் பிரதிநிதித்துவம் செய்கிறார்கள் என்பதை இலகுவில் புரிந்துகொள்ள முடியும். பிரேசிலில் வாழும் பெரும்பாலான மக்கள் சாதாரண நிலையிலேயே உள்ளவர்கள் என்றாலும் கூட, வலதுசாரிக் கருத்தியலைக் கொண்டவர்கள் அணிதிரண்டு பலமான சக்தியாக உருவாகி உள்ளார்கள் என்பதன் வெளிப்பாடே பொல்சொனரோ கருத்துக் கணிப்புகளைப் பொய்யாக்கி அதிக வாக்குகளைப் பெற்றமை எனலாம்.


அது மாத்திரமன்றி கருத்துக் கணிப்புகளின்போது தமது உண்மையான நிலைப் பாட்டை வெளிப்படுத்தாமல் எதிரணிக்கே அதிக வெற்றி வாய்ப்பு உள்ளது என்ற போலித் தோற்றத்தை உருவாக்கி, எதிரணியினரின் செயற்பாடுகளின் வீரியத்தினைக் குறைக்கும் உத்தியையும் வலதுசாரிகள் அண்மைக் காலத்தில் பயன்படுத்தத் தொடங்கியுள்ளார்கள் என்பதுவும் நினைவில் கொள்ளத்தக்கது. தற்போதைய நிலையில், அடுத்து வரும் நாட்கள் பிரேசிலைக் கொதிநிலையில் வைத்திருக்கப் போகின்றது என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. தேர்தல் பரப்புரைகளின்போது டா சில்வா ஒரு முன்னாள் ‘சிறைக்கைதி, துரோகி’ என பொல்சொனரோவும், மறுபுறம் பொல்சொனரோ ஒரு பொய்யன், பைத்தியக்காரன்” என டா சில்வாவும் பரஸ்பரம் விமர்சித்துக் கொண்டதைப் பார்க்க முடிந்தது. இது போன்ற தாக்குதல்கள் தொடரும் அதேவேளை, அது வன்முறையாக உருவெடுக்குமா என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டியுள்ளது.


வாக்கு வீத அடிப்படையில் டா சில்வாவே முன்னணியில் நின்றாலும், மூன்றாவது இடத்தைப் பெற்ற சிமோனே ரெபெற் பெற்ற 4.16 சதவீத வாக்குகளையும், நான்காம் இடத்தைப் பெற்ற சிரோ கோமஸ் பெற்ற 3.04 சதவீத வாக்குகளையும் யார் பெறப்போகின்றார்கள் என்பது முக்கியமானது. நோக்கர்களின் கருத்தின் பிரகாரம் ஜனநாயகத்தை ஆதரிக்கும் இந்த இருவரதும் வாக்குகள் பெரும்பாலும் டா சில்வாவுக்கே கிடைக்கும். ஆனாலும், தலைவர்களின் முடிவுகளை அறிவித்தாலும் தொண்டர்கள் அவற்றை ஏற்றுக்கொண்டு அதன்படி வாக்களிப்பார்களா என்ற ஐயம் உள்ளது. அதேபோன்று, முதல் சுற்றில் வாக்களிக்கத் தவறிய 20.9 சதவீதமான மக்களின் வாக்குகளும் பெறுமதியானவை. பிரேசில் ஜனாதிபதி தேர்தலில் நிகழும் ஜனநாயகத்துக்கும் சர்வாதிகாரத்துக்கும் எதிரான போட்டியில் வெல்லப்போவது ஜனநாயகமா? சர்வாதிகாரமா? முடிவு வாக்காளர் கையிலேயே உள்ளது.

credit to:

Spread the love