ரயில்களில் பாதுகாப்பு நடவடிக்கையை மேலும் அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மற்றும் பயணச்சீட்டு பரிசோதகர்கள் ஆகியோருக்கு இந்த விடயம் தொடர்பில் விசேட ஆலோசனைக் கோவையொன்று விநியோகிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் W.A.D.S.குணசிங்க குறிப்பிட்டார்.
அதற்கமைய, குறுந்தூர சேவையில் ஈடுபடும் ரயில்களில் திடீர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. தூர சேவைகளில் ஈடுபடுத்தப்படும் ரயில்களில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் கூறினார்.
அண்மை காலமாக ரயில் பயணிகளின் பணம் மற்றும் தங்க நகைகள் ஆகியன திருடப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ள காரணத்தினால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். அதற்காக சிவில் பாதுகாப்பு படையணியின் ஒத்துழைப்பும் கோரப்பட்டுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் W.A.D.S.குணசிங்க இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.