நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நிதி கஷ்டங்கள் காரணமாக மத்திய அரசாங்கத்தினால், உள்ளூராட்சி நிறுவனங்கள் நடைமுறைப்படுத்தும் திட்டங்களுக்காக நிதி ஒதுக்குவதை குறைக்க நேரிட்டுள்ளதாக நிதியமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளார்.
இதனால், உள்ளூராட்சி நிறுவனங்களின் அத்தியவசிய பொது வசதிகள் பராமரிப்பு மற்றும் அவற்றை முன்னெடுத்துச் செல்ல உள்ளூராட்சி நிறுவனங்கள் நிதியம் மற்றும் மாகாண சபை நிதியத்தை பயன்படுத்தி பொருத்தமான நடவடிக்கைகளை எடுக்குமாறு அரச நிர்வாகம், உள்நாட்டு அலுவல்கள்,மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் அமைச்சின் செயலாளர் எம்.எம்.பி. மாயாதுன்னே, அனைத்து மாகாண முதன்மை செயலாளர்களுக்கும் சுற்றறிக்கை மூலம் ஆலோசனை வழங்கியுள்ளார்.
இதனடிப்படையில், உள்ளூராட்சி நிறுவனங்கள் பொதுமக்களுக்கு வழங்கும் சேவைகளுக்காக அறவிடும் வரி பண அனுமதிப்பத்திர கட்டணம், சொத்து வரி அவற்றின் மூலம் கிடைக்கும் வருமானத்தை பயன்படுத்தி, தமது பிரதேசங்களில் மழை மற்றும் வெள்ளம் போன்றவற்றால் சேதமடையும் வீதிகளை செப்பனிடும் வேலைத்திட்டங்களை உருவாக்கிக்கொள்ளுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அரச நிர்வாகம், உள்நாட்டு அலுவல்கள்,மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் அமைச்சராக பிரதமர் தினேஷ் குணவர்தன பதவி வகித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.