கொழும்பு – அத்துல பிரதேசம் பகுதியில் ஏராளமான பொலிஸார், கலகத்தடுப்பு பிரிவினர் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் நீர்த்தாரை பிரயோக வாகனங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. குறித்த பகுதியில் காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்கள் மற்றும் சிவில் செயற்பாட்டாளர்கள் இணைந்து போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகே மற்றும் சிறிதம்ம தேரர் ஆகியோரை உடனடியாக விடுதலை செய்யுமாறு வலியுறுத்தியும், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட ஏனைய ஆர்ப்பாட்டக்காரர்களையும் உடன் விடுதலை செய்யுமாறு வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அத்துடன், தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறிதம்ம தேரர் டெங்கு காய்ச்சலால் அவதிப்படுவதாக தெரியவரும் நிலையில் அவருக்கு உரிய வைத்திய உதவிகளை வழங்குமாயும் வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையிலேயே அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.