அரசியலமைப்புச்சட்டத்தின் 17,18,19,20 மற்றும் 22 ஆகிய திருத்தச் சட்டங்களுக்கு ஆதரவாக தற்போது நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் 18 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்துள்ளதாக மந்திரி.எல்.கே இணையத்தளம் தெரிவித்துள்ளது.
5 திருத்தச்சட்டங்களுக்கு ஆதரவாக வாக்களித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள்
18வது திருத்தச்சட்டத்தின் மூலம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரங்கள் அதிகரிக்கப்பட்டதுடன் 19வது திருத்தச்சட்டத்தின் மூலம் ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டன.
இதனையடுத்து 20வது திருத்தச்சட்டத்தின் மூலம் மீண்டும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரங்கள் அதிகரிக்கப்பட்டதுடன் 22வது திருத்தச்சட்ட மூலம் மீண்டும் குறைக்கப்பட்டது. இந்த 18 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த திருத்தச்சட்டங்கள் அனைத்திற்கும் ஆதரவாக வாக்களித்திருப்பது தெளிவாக தெரியக்கூடிய சம்பவமாக இருப்பதாக அந்த இணையத்தளம் கூறியுள்ளது.
அமைச்சர் தினேஷ் குணவர்தன,அனுர பிரியதர்ஷன யாப்ப, ஏ.எல்.எம்.அதாவுல்லா, சீ.பீ.ரத்நாயக்க, டிலான் பெரேரா, டலஸ் அழகப்பெரும, துமிந்த திஸாநாயக்க, பந்துல குணவர்தன, ஜயரத்ன ஹேரத், ஜோன் செனவிரத்ன, எம்.எஸ்.தவ்ஃபிக், மகிந்தானந்த அளுத்கமகே, நிமல் சிறிபால டி சில்வா, பிரியங்கர ஹேரத், ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய, எஸ்.பி.திஸாநாயக்க, சுசில் பிரேமஜயந்த, விமல் வீரவங்ச ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த 5 திருத்தச்சட்டங்களுக்கும் ஆதரவாக வாக்களித்துள்ளனர்.
மூன்று திருத்தச்சட்டங்களுக்கு ஆதரவாக வாக்களித்த 43 நாடாளுமன்ற உறுப்பினர்கள்
மேலும் 43 நாடாளுமன்ற உறுப்பினர்கள், 19, 20, 22 ஆகிய திருத்தச்சட்டங்களுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர் என மந்திரி.எல்.கே இணையத்தளம் மேலும் தெரிவித்துள்ளது.