மாத்தறை – திஹகொடவில் பாடசாலை மாணவர் ஒருவர் மீது பொலிஸாரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் உரிய முறையில் மேற்கொள்ளப்படும் என தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.
அதற்காக தமது அதிகார சபையுடன் இணைந்த பொலிஸ் அதிகாரிகளை ஈடுபடுத்தவுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதய குமார அமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பிலான ஆரம்பகட்ட விசாரணை அறிக்கை, பொலிஸாரினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
சம்பவத்தில் காயமடைந்த சிறுவன், கராப்பிட்டி வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார். இதனிடையே, துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்ட உப பொலிஸ் இன்ஸ்பெக்டர் எதிர்வரும் 02ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.