தேசிய அடையாள அட்டையை விநியோகிப்பதற்கான கட்டணங்கள் இன்று(01) முதல் அதிகரிக்கப்பட்டுள்ளன.
முதல் தடவையாக தேசிய அடையாள அட்டையை பெற்றுக்கொள்வதற்காக சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பப் படிவத்திற்கு 200 ரூபா கட்டணத்தை செலுத்த வேண்டும் என ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக்க தெரிவித்தார்.
15 வயது நிரம்பிய மாணவர்கள், முதல் தடவையாக தேசிய அடையாள அட்டையை பெற்றுக் கொள்வதற்காக விண்ணப்பிக்கும் போது செலுத்தப்பட வேண்டிய 100 ரூபா கட்டணமே இன்று(01) முதல் அமுலாகும் வகையில் 200 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதென அவர் கூறியுள்ளார்.
காணாமல் ஆக்கப்பட்ட தேசிய அடையாள அட்டையின் பிரதியை பெற்றுக் கொள்வற்காக இதுவரை காலம் அறவிடப்பட்ட 500 ரூபா கட்டணம் இன்று(01) முதல் 1,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
தேசிய அடையாள அட்டையில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு இதுவரை 250 ரூபா என்ற ரீதியில் சேவைக் கட்டணம் அறவிடப்பட்டதுடன், இன்று(01) முதல் இந்த சேவைக்கு 500 ரூபா கட்டணம் அறிவிடப்படும் என ஆட்பதிவு ஆணையாளர் நாயகம் கூறியுள்ளார்.
தேசிய அடையாள அட்டைக்குரிய நிழற்படத்தை பெறுவதற்கான அங்கீகாரத்தை பெற்றுக்கொள்ளும் புகைப்பட கலைக்கூடங்களை பதிவு செய்வதற்கான கட்டணம் 15,000 ரூபாவாக திருத்தப்பட்டுள்ளதாக ஆட்பதிவு ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக்க சுட்டிக்காட்டியுள்ளார்.
தேசிய அடையாள அட்டைகளை வழங்குவதற்கான சேவைக் கட்டண திருத்தங்கள் இன்று (01) முதல் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சு கடந்த 14ஆம் திகதி வர்த்தமானியில் அறிவித்திருந்தது.