இறக்குமதி செய்யப்படும் சில வகை மருந்துப் பொருட்களின் விலைகள் 300 முதல் 400 வீதம் வரையில் உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எனவே இறக்குமதி செய்யப்படும் மருந்து வகைகளுக்கு விலைப் பொறிமுறை அறிமுகம் செய்யப்பட வேண்டுமென தனியார் மருந்தக உரிமையாளர் சங்கத்தின் தலைவர் சந்தன கல்கந்த கோரியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், விலைச்சூத்திரம் ஔடத கட்டுப்பாட்டு சபையினால் மேற்கொள்ளப்பட வேண்டும். இது குறித்து அதிகாரிகளை தெளிவுப்படுத்திய போதிலும் சாதகமான பதில் எதுவும் கிடைக்கவில்லை.
தற்போது மருந்துகளின் பெயர்களினால் அடையாளப்படுத்தப்படும் 1200 மருந்து வகைகள் காணப்பட்டாலும் 100 மருந்து வகைகள் மட்டுமே விலைப் பொறிமுறைமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. அரசாங்கம் அனுமதி வழங்கியதன் அடிப்படையில் முறை 29 மற்றும் 40 வீதம் என மருந்து பொருட்களின் விலைகள் உயர்வடைந்திருந்தன.
எனினும் சில மருந்து வகைகளுக்கு விலைப்பொறிமுறைமை இல்லாத காரணத்தினால் மருந்து பொருட்களின் விலைகள் 300 முதல் 400 வீதம் வரையில் உயர்வடைந்துள்ளது. இறக்குமதியாளர், மொத்த வியாபாரி மற்றும் சில்லறை வியாபாரி ஆகிய தரப்பினரின் இணக்கப்பாட்டுடன் விலைப் பொறிமுறைமை அறிமுகம் செய்யப்பட வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்.