பணத்தை திருடியதாகக் குற்றஞ்சாட்டி, ஹொரணை – மில்லனிய கனிஷ்ட வித்தியாலயத்தில் ஐந்தாம் ஆண்டில் கல்வி கற்கும் மாணவர்கள் சிலரை தாக்கியமை தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள குறித்த பாடசாலையின் அதிபரை பணியிலிருந்து இடைநிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக மேல் மாகாண கல்வித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மேல் மாகாண கல்வித் திணைக்களத்தின் பணிப்பாளர் ஸ்ரீலால் நோனீஸ் குறிப்பிட்டார். விசாரணைக்காக நியமிக்கப்பட்டுள்ள குழுவில் மத்திய கல்வி அமைச்சின் அதிகாரியொருவரும் அடங்குகின்றார்.
சம்பவத்துடன் தொடர்புடைய அதிபர், பொலிஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபள் ஆகியோரை எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் நேற்று(08) உத்தரவிட்டது.
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையால் இவர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட சந்தர்ப்பத்தில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதன்போது பாடசாலையின் பிரதி அதிபர் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபள் சாரதி ஆகியோருக்கு பிணை வழங்கப்பட்டது.
சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்பட்டு தமது அதிகார சபையின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ள, பொலிஸ் ஜீப் வண்டி தொடர்பில் அரச இரசாயன பகுப்பாய்வாளரிடம் அறிக்கையொன்றை பெறவுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் உதயகுமார அமரசிங்க தெரிவித்தார். குறித்த மாணவர்களின் வாக்குமூலத்திற்கு அமைய ஜீப் வண்டிக்குள் மின்சாரம் தாக்கப்பட்டமை தொடர்பிலான சம்பவத்தை உறுதிப்படுத்துவதற்காக இந்த அறிக்கை பெறப்படவுள்ளது.
ஆசிரியை ஒருவரின் பையிலிருந்த பணத்தை திருடியதாகக் குற்றஞ்சாட்டி, குறித்த மாணவர்களை நூலகத்திற்குள் அழைத்துச் சென்று அதிபர் மற்றும் ஆசிரியர் ஆகியோர் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, சம்பவம் தொடர்பில் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரின் தலைமையில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.