இலங்கையில் சுமார் 56,000 குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு உடனடி சிகிச்சை தேவைப்படுவதாகவும் யுனிசெப்பின் (UNICEF) அறிக்கை தெரிவித்துள்ளது. இலங்கையில் 22 இலட்சம் சிறுவர்களுக்கு மனிதாபிமான உதவிகள் தேவைப்படுவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடி காரணமாக வெளிநாட்டு வேலைகளுக்கு செல்லும் தொழிலாளர்களின் எண்ணிக்கையும் இவ்வருடம் 286 வீதத்தால் அதிகரித்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் 4.8 மில்லியன் சிறுவர்கள் கல்வி கற்க வேண்டும் என யுனிசெப்பின் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
6.2 மில்லியன் மக்கள் மிதமான உணவுப் பாதுகாப்பின்றி உள்ளனர் என்றும் 66,000 பேர் கடுமையான உணவுப் பாதுகாப்பின்றி உள்ளனர் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐந்து இலங்கை குடும்பங்களில் இரண்டு குடும்பங்கள் தமது மாத வருமானத்தில் 75 வீதத்தை உணவுக்காக செலவிடுகின்றனர் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.