இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் மோதல் இன்று!

இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடர் இன்று (25) பல்லேகலவில் ஆரம்பமாகவுள்ளது. இந்தத் தொடருக்காக தெரிவு செய்யப்பட்ட இலங்கைக் குழாத்துக்கு விளையாட்டு அமைச்சு நேற்று (24) மாலை வரை ஒப்புதல் அளிக்காதது மற்றும் அணித் தேர்வு பற்றி பல கேள்விகள் எழுப்பப்பட்டிருக்கும் குழப்பமான சூழலிலேயே இன்று முதல் போட்டி நடைபெறவுள்ளது.

ஆப்கான் தொடருக்கான இலங்கைக் குழாம் ஒரு வாரத்துக்கு முன்னரே தேர்வுக் குழுவினரால் தேர்வு செய்யப்பட்டிருக்கும் நிலையிலேயே அதற்கான ஒப்புதலை வழங்குவதில் இழுபறி நீடிக்கிறது. குறிப்பாக இந்தக் குழாத்தில் சகலதுறை வீரர் சாமிக்க கருணாரத்ன சேர்க்கப்படவில்லை. நடந்து முடிந்த டி20 உலகக் கிண்ணப் போட்டியில் அவர் சோபிக்காததாலேயே அணியில் சேர்க்கப்படவில்லை என்றபோதும் அவர் மீதான ஒழுக்காற்று விசாரணையும் இதில் தாக்கம் செலுத்தி இருப்பதாக முன்னர் சந்தேகம் எழுப்பப்பட்டிருந்தது.

வீரர்கள் ஒப்பந்தத்தின் விதிகளை மீறியதற்காக சாமிக்க கருணாரத்னவுக்கு இலங்கை கிரிக்கெட் சபை ஓர் ஆண்டு ஒத்திவைக்கப்பட்ட தடையை விதித்துள்ளது. இந்நிலையில் அவர் அணியில் சேர்க்கப்படாதது பற்றி அறிக்கை ஒன்றை தரும்படி விளையாட்டுத் துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க, விளையாட்டு பணிப்பாளர் நாயகத்தை கேட்டுள்ளார்.

எவ்வாறாயினும் ஒப்புதல் கிடைக்காத தேர்வு செய்யப்பட்ட இலங்கை அணி ஏற்கனவே கண்டி சென்று பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இலங்கை அணி ஆப்கானை இரு தரப்பு ஒருநாள் தொடர் ஒன்றில் எதிர்கொள்வது இது முதல் முறையாக உள்ளது. இந்தத் தொடர் அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கிண்ணப் போட்டிக்கு நேரடித் தகுதி பெறுவதற்கு தீர்க்கமானதாகவும் உள்ளது.

இந்தத் தொடர் ஐ.சி.சி ஒருநாள் சுப்பர் லீக்கில் இணைக்கப்பட்ட போட்டியாகவே நடைபெறவுள்ளது. இந்த ஒருநாள் சுப்பர் லீக்கில் மொத்தமாக 18 போட்டிகளில் ஆடியிருக்கும் இலங்கை அதில் 6 வெற்றிகளை மாத்திரமே பதிவு செய்து புள்ளிகள் பட்டியலில் 10ஆம் இடத்தில் காணப்படுகிறது.

இந்த நிலையில் ஒருநாள் சுப்பர் லீக்கில் தொடரினை நடத்தும் இந்தியாவுடன் புள்ளிகள் பட்டியலில் முதல் 8 இடங்களைப் பெறும் அணிகளே ஒருநாள் உலகக் கிண்ணத் தொடருக்கு நேரடி தகுதி பெறும் என்பதன் காரணமாக இலங்கைக்கு ஆப்கானிஸ்தான் தொடரில் வெற்றி பெற வேண்டி இருப்பதோடு, தொடரில் 3–0 என வெற்றி பெறுவதே இலங்கை கிரிக்கெட் அணி நேரடியாக உலகக் கிண்ணத்துக்கு தகுதி பெறுவதனை அதிகப்படுத்தும். எனவே அழுத்தங்கள் கொண்ட நிலையிலேயே இலங்கை அணி ஆப்கானை எதிர்கொள்ளவுள்ளது.

ஆனால் கடைசியாக இலங்கை வந்த அவுஸ்திரேலிய அணியினை ஒருநாள் தொடரில் இலங்கை அணி வீழ்த்தி இருந்ததோடு, அதே மாதிரியான ஆட்டத்தினை ஆப்கான் தொடரிலும் இலங்கை வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இலங்கை–ஆப்கான் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகளும் பல்லேகலவில் நடைபெறவுள்ளதோடு இன்றைய போட்டி பகலிரவு ஆட்டமாக மாலை 2.30க்கு ஆரம்பமாகவுள்ளது.

Spread the love