இலங்கை எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிகள் மற்றும் அவற்றிலிருந்து மீள்வதற்கான போராட்டங்களில் சூரிய சக்தி, காற்று சக்தி மற்றும் நீர் உள்ளிட்ட பசுமை முதலீடுகளை பயன்படுத்துவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. நாட்டுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள சர்வதேச காலநிலை தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகர் எரிக்சொல்ஹெய்ம் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கிடையில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற சந்திப்பின்போதே இவ்விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது. ஜனாதிபதியுடனான சந்திப்பு தொடர்பில் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள எரிக்சொல்ஹெய்ம் கொழும்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் சிறந்த கலந்துரையாடலொன்று இடம்பெற்றது. இலங்கை எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிகள், பொருளாதார நெருக்கடியை எதிர்த்துப் போராடுவதற்கு சூரிய, காற்று, நீர் உள்ளிட்ட பசுமை முதலீடுகளைப் பயன்படுத்துவதற்கு இலங்கைக்கு அதிக வாய்ப்புகள் காணப்படுவது தொடர்பில் நாம் கவனம் செலுத்தினோம். என்று குறிப்பிட்டுள்ளார்.