தேசிய பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர் சம்பந்தன், பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா மற்றும் அடங்கிய குழுவினர் மாலை 5 மணிக்கு ஜனாதிபதியை சந்தித்து மூன்று முக்கிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
வடக்கு மற்றும் கிழக்கில் ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளை விடுவித்தல், அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை அமுல்படுத்துதல் மற்றும் தேசிய பிரச்சினைக்கு முழுமையான அரசியல் தீர்வு தொடர்பிலும் கலந்துரையாடப்படவுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் இதற்கு முன்னர் இரண்டு தடவைகள் ஜனாதிபதியை சந்தித்துள்ளனர்.
இதன்படி, பெறுமதிமிக்க இரண்டு சந்திப்புகளின் போது கலந்துரையாடப்பட்ட விடயங்களும் கலந்துரையாடப்படவுள்ளன. 75ஆவது சுதந்திர தின விழாவிற்கு முன்னதாக தேசிய பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண விரும்புவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த வருடம் அறிவித்திருந்தார். அதற்கிணங்க, ஜனாதிபதி அனைத்து தரப்பினரையும் இந்த விடயம் தொடர்பில் விரிவாக கலந்துரையாடி நிலையான மற்றும் நிரந்தரமான தீர்வுக்கு உடன்படுமாறு அழைப்பு விடுத்துள்ளார்.