இருபதுக்கு 20 அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தலைவர் ஆரோன் ஃபின்ச், இருபதுக்கு 20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 2021 இல் டுபாயில் நியூசிலாந்தை தோற்கடித்து, தமது அணிக்கு முதலாவது இருபதுக்கு 20 உலகக் கிண்ணத்தை வென்றெடுக்க ஃபின்ச் சிறந்த தலைமைத்துவத்தை வழங்கினார்.
ஐந்து டெஸ்ட், 146 ஒருநாள் சர்வதேச போட்டிகள் மற்றும் 103 இருபதுக்கு 20 போட்டிகளில் விளையாடியுள்ளார். ஜனவரி 2011 இல் இங்கிலாந்துக்கு எதிரான இருபதுக்கு 20 இல் சர்வதேச அரங்கில் அறிமுகமான ஃபின்ச், 17 ஒருநாள் சதங்கள் மற்றும் இரண்டு இருபதுக்கு 20 சதங்கள் உள்ளடங்களாக 8,804 ஓட்டங்களை பெற்றுள்ளார்.
கடந்த ஆண்டு செப்டெம்பரில் ஃபின்ச் தனது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். எனினும், இருபதுக்கு 20 போட்டிகளில் அவுஸ்திரேலியாவின் தலைவராக ஃபின்ச் தொடர்ந்தார்.2020 ஆம் ஆண்டில், ஐசிசியின் தசாப்தத்தின் சிறந்த இருபதுக்கு20 கிரிக்கெட் வீரர் விருதுக்கு அவர் பரிந்துரைக்கப்பட்டார்.