தேர்தலுக்கான நிதியை கோரி உயர்நீதிமன்றில் தேர்தல் ஆணைக்குழு

திறைசேரி செயலாளர் உட்பட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்குத் தேவையான நிதியை விடுவிக்க தவறியதன் காரணமாக, தேர்தல்கள் ஆணைக்குழு பெரும் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க உயர்நீதிமன்றில் வழங்கிய வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

எனவே உள்ளூராட்சி மன்றத் தேர்தலை சட்டத்திற்கு அமைவாகவும், உறுதிமொழிகளுக்கு அமைவாகவும் நடத்துவதற்கு வசதியாக நிதி அமைச்சின் செயலாளர் மற்றும் ஏனைய அதிகாரிகளுக்கு உரிய உத்தரவு பிறப்பிக்குமாறு தேர்தல்கள் ஆணையாளர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க உயர்நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருடன் கலந்தாலோசித்தே, இந்த வாக்குமூலத்தை சமர்ப்பிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன தலைவரும், இலங்கை மின்சார சபையின் தலைவரும், மின்சாரத்தை வழங்குவதில் உள்ள சிரமங்கள் குறித்து அறியப்படுத்தி உள்ளனர்.

எனினும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை மின்சார சபை என்பன தேர்தல் நோக்கத்திற்காக முறையே எரிபொருள் மற்றும் மின்சாரம் வழங்குவதை உறுதி செய்ய கடமைப்பட்டுள்ளன. தேர்தல் நோக்கத்திற்காக எரிபொருள் மற்றும் மின்சார விநியோகத்தை மறுக்கும் எந்தவொரு நடவடிக்கையும் தேர்தல் பணிக்கு இடையூறு ஏற்படுத்தும் என்றும் தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடவடிக்கைகளுக்காக 10,000 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கு பாராளுமன்றம் அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும் அவர் உயர்நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார். தேர்தல் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு 10,000 மில்லியன் ரூபாவை ஒரே தடவையில் ஏற்பாடு செய்ய வேண்டிய அவசியமில்லை. முந்தைய தேர்தல்களின் தரவுகளின்படி, தேர்தலுக்கான மொத்தச் செலவில் 25 வீதத்துக்கும் குறைவான தொகையே தேர்தலுக்கு முன்பாகச் செலவிடப்பட்டுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணையாளர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Spread the love