அத்தியவசிய பொருட்களுக்கான இறக்குமதி வசதிகளை செய்து கொடுக்கும் நோக்கில் இலங்கைக்கு 400 மில்லியன் அமெரிக்கடொலர்களை உலக வங்கியின் சர்வதேச நிதி கூட்டுத்தாபனம் வழங்கவுள்ளது.
அமெரிக்க டோலர்களை பயன்படுத்தி இறக்குமதி செய்யப்படும் பெரும்பாலான உணவு, மருந்து மற்றும் உரங்கள் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் இறக்குமதியை எளிதாக்க உதவும் வகையில் இந்த நிதி உதவி வழங்கப்படவுள்ளது.
இலங்கையின் வெளிநாட்டு செலாவணி மற்றும் ஏற்றுமதி நடவடிக்கைகளில் 30 சதவீதமானவற்றை நிர்வகித்து வரும் மூன்று தனியார் வங்கிகள் ஊடாக இந்த நிதி வசதி வழங்கப்படவுள்ளது.
இதன்மூலம் அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்கு தேவையான வெளிநாட்டு நாணய நிதி கையிருப்பு இலங்கைக்கு கிடைக்கவுள்ளதாக உலக வங்கியின் தெற்காசிய பிராந்திய நிதி நிறுவனத்திற்கான முகாமையாளர் ஜூன் யங் பார்க் Joon Young Park தெரிவித்துள்ளார்.
‘இந்த நிதியுதவி முதலீட்டாளர் சமூகத்தில் நம்பிக்கையை அதிகரிக்கும். இலங்கைப் பொருளாதாரத்திற்கு ஆதரவாக புதிய மூலதன வரவுகளை ஈர்க்கக்கூடியதாக அமையும் என்றும் நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்றும் அவர் குறிப்பிட்டார்
‘எதிர்காலத்தில் நீண்ட கால நிதி மற்றும் ஆலோசனை சேவைகளுடன் எங்கள் வாடிக்கையாளர் வங்கிகளுக்கு ஆதரவளிப்பதற்கான கூடுதல் திட்டங்களிலும் நாங்கள் பணியாற்றுவோம்’ அவர் மேலும் தெரிவித்துள்ளார்.