முல்லைத்தீவில், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டம் இன்று காலை முல்லைத்தீவு நகர்ப் பகுதியில் இடம்பெற்றது.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தமக்கு நீதி கோரி கடந்த 2017.03.08 அன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆரம்பித்த தொடர் கவனயீர்ப்பு போராட்டம், ஆறு ஆண்டுகள் கடந்து இன்று ஏழாவது ஆண்டில் கால்பதிக்கிறது.
இந்நிலையிலேயே 7 வருட தொடர் போராட்டத்தின் போதும் தமக்கான நீதி இதுவரை கிடைக்கவில்லை எனத் தெரிவித்து இன்று காலை காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். இதன்போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் காணாமல்போன தமது உறவுகளின் புகைப்படங்கள் மற்றும் பதாதைகளை ஏந்தியவாறு கோசங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இதன்போது தமது எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையிலான கருத்துக்களை ஊடகங்களிற்கு வெளிப்படுத்தியிருந்தனர். மேலும் காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகள் தொடர்பில் சர்வதேச நீதி வேண்டும், இராணுவத்தின் கைகளில் ஒப்படைத்த எமது பிள்ளைகள் எங்கே?, இன்றைய சர்வதேச மகளிர் தினத்திலும் நாம் வீதியில் நின்று கதறும் நிலையே காணப்படுகின்றது, ஐ.நா 53ஆவது கூட்டத்தொடரிலாவது எமக்கான நீதி கிடைக்குமா? எனவும் தங்கள் ஆதங்கங்களை வெளிப்படுத்தி போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.