கருங்கடலில் பாதுகாப்பு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்காவின் ஆளில்லா விமானத்தை ரஷ்ய போர் விமானம் மோதித் தள்ளியுள்ளது. இதனால் அந்த ஆளில்லா விமானம் கருங்கடலில் விழுந்து நொருங்கியதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அமெரிக்க விமானப்படை அதிகாரிகள் கூறுகையில், அமெரிக்க இராணுவத்தின் எம்.க்யூ -9 ரக டிரோன் வழக்கமாக சர்வதேச விமானங்களை கண்காணித்து வந்தபோது அதனை இடைமறித்து ரஷ்ய போர் விமானம் அமெரிக்க டிரோன் மீது மோதியது என தெரிவித்துள்ளது.
வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி இது தொடர்பாக தெரிவிக்கையில், “பாதுகாப்பற்ற மற்றும் தொழில்சார்ந்த இடைமறிப்புக்காக” ரஷ்யாவை சாடியுள்ளார், மேலும் நிலைமை குறித்து அதிபர் ஜோ பைடனுக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
ரஷ்ய விமானங்கள் அமெரிக்க விமானங்கள் மற்றும் கப்பல்களுக்கு மிக அருகில் வருவது போன்ற சம்பவங்கள் “அசாதாரணமானவை அல்ல” என்று கிர்பி கூறினார்.
இதேவேளை ரஷ்ய அரசு தொலைக்காட்சியின் இன்று மாலை இடம்பெற்ற செய்தியில்,கருங்கடலில் அமெரிக்க ட்ரோன் தாக்கப்பட்டமை தொடர்பான சம்பவத்தைப் பற்றி சுருக்கமாக குறிப்பிட்டுள்ளது. தொகுப்பாளர் கூடுதல் கருத்து இல்லாமல் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்தின் அறிக்கையை வாசித்தார்.
இந்த சம்பவம் தொடர்பில் எதிர்ப்பை தெரிவிக்க அமெரிக்காவுக்கான ரஷ்யாவின் தூதுவர் அனடோலி அன்டோனோவ், அமெரிக்க வெளியுறவுத் துறைக்கு அழைக்கப்பட்டுள்ளார். ஐரோப்பா மற்றும் யூரேசியாவிற்கான அமெரிக்க உதவி செயலாளரான Karen Donfried அவர்களால் முறையான எதிர்ப்பை முன்வைப்பார்.