இலங்கை ஒரு சிவபூமி, ஆதிலிங்கம் அழிக்கப்பட்டமை நாட்டின் அழிவிற்கான ஆரம்பம் எனவும் குருந்தூர்மலையில் நீதிமன்ற தீர்ப்பை மீறி விகாரை கட்டப்படுகின்றது. அதை எந்த சட்டமும் தண்டிக்கவில்லை என வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தின் அறங்காவலர் பூபாலசிங்கம் தெரிவித்தார்.
இது தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை ஊடகங்களுக்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், எமது ஆலயம் இடித்தழிக்கப்பட்டதை தொடர்ந்து, நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை விக்கிரகங்களை பிரதிஸ்டை செய்வதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன.
எனினும் நேற்று முன்தினம் சனிக்கிழமை மாலை இதற்கான பணிகளை செய்த மூவர் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டனர். நேற்று அமைச்சர்களின் பிரசன்னத்துடன் விக்கிரகங்கள் பிரதிஸ்டை செய்யப்படும் என எமக்கு தெரிவித்திருந்தனர். ஆனால் அது நடைபெறவில்லை. அது எமக்கு மிகுந்த கவலையளிக்கின்றது.
2018 ஆம் ஆண்டு தொல்பொருட்திணைக்களம் தலையிடும் வரை இந்த ஆலயத்தில் பொதுமக்கள் சுதந்திரமாக தமது வழிபாடுகளை முன்னெடுத்திருந்தனர். இந்த ஆலயவளாகம் அரச வர்த்தமானியில் பிரகடனப்படுத்தாத ஒரு இடமாகவே இருக்கின்றது. எனினும் இந்து ஆலயங்களை அழிப்பதற்காகவே தொல்பொருட் திணைக்களம் உருவாக்கப்பட்டுள்ளதாக நாங்கள் கருதவேண்டியுள்ளது.
குருந்தூர்மலையில் நீதிமன்ற தீர்ப்பை மீறி விகாரை கட்டப்படுகின்றது. அதை எந்த சட்டமும் தண்டிக்கவில்லை. ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்திற்குள் செல்ல வேண்டாம் என்று நீதிமன்றம் எமக்கு இதுவரை உத்தரவு போடவில்லை.
தொல்லியல் திணைக்களமும் காவல்துறையினருமே அதற்கு தடை ஏற்படுத்துகின்றனர். எம்மை உள்ளே விடாமல் செய்துவிட்டு தற்போது யார் உடைத்தது என்று எங்களைப்பார்த்து அவர்கள் கேட்கின்றனர். மதவெறிபிடித்தவர்களால் எமது இந்து ஆலயங்கள் சீண்டப்படுகின்றன. எனவே இந்த நாட்டில் நல்லிணக்கம் ஏற்படுதற்கான வாய்ப்பே இல்லை என்று நாம் கருதுகின்றோம் எனவும் சுட்டிக்காட்டினார்.