சஜித்தை பழிவாங்குவதாக நினைத்துக் கொண்டு வடக்கு கிழக்கு மக்களையே அரசாங்கம் பழிவாங்குகின்றது! – சாணக்கியன்

சஜித் பிரேமதாஸவினை பழிவாங்குவதாக நினைத்துக் கொண்டு உண்மையிலேயே வடக்கு கிழக்கிலே வாழும் மக்களையே இந்த அரசாங்கம் பழிவாங்குகின்றது என பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் நேற்று (04) கேள்வி நேரத்தின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது உரையாற்றிய அவர், ‘உண்மையிலேயே இந்த மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டுமல்ல எங்களுடைய வடக்குக் கிழக்கிலே இருக்கும் அனைத்து மாவட்டங்களிலுமே நல்லாட்சி காலப்பகுதியிலே அந்த நேரத்திலே வீடமைப்பு அதிகார சபைக்கு பொறுப்பாக இருந்த அமைச்சர் சஜித் பிரேமதாஸ பல வீடு திட்டங்களை இந்த வடக்குக் கிழக்கிலே வந்து ஆரம்பித்திருந்தார்.

உண்மையிலேயே இந்த நல்லாட்சி அரசாங்கமானது மாறிவிட்டதுக்கு பிறகு நல்லாட்சி அரசாங்கத்தின் கீழே சஜித் பிரேமதாஸவின் அமைச்சின் கீழே வழங்கப்பட்ட வீடுகள் என்ற ஒரே ஒரு காரணத்துக்காக இந்த வீட்டுத்திட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

சஜித் பிரேமதாஸவினை பழிவாங்குவதாக நினைத்துக்கொண்டு இந்த வீடு திட்டங்களை முடிக்காமல் இருப்பதன் ஊடாக உண்மையிலேயே வடக்கு கிழக்கிலே வாழும் மக்களை தான் நீங்கள் பழிவாங்குகின்றீர்கள்.

ஏனென்றால் உங்களுக்கு தெரியும் 2020ஆம் ஆண்டு கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக வந்ததன் பின்னர் எத்தனையோ அமைச்சர்களிடம் இந்த கேள்விகளை நாங்கள் கேட்கும்போது கூட ஒவ்வொரு அமைச்சரும் இதை நாங்கள் முடித்து தருவோம் நிதி கிடைத்தால் முடித்து தருவோம் என கூறுகின்றோம்.

நிதியை பெற்றுக்கொடுப்பது அரசாங்கத்தினுடைய பொறுப்பு. வீடமைப்பு அதிகார சபைக்குரிய நிதி கிடைக்கும் பட்சத்தில் ஆறு மாதத்திற்குள் நாங்கள் முடிப்போம் என்று சொல்வதானது நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு பதில்.

இந்த வீடுகள் லிண்டர் மட்டத்திற்கு கட்டினால் 5 லட்சம் ரூபாய், கூரை போட்டால் 10 இலட்சம் ரூபாய் என கூறியமைக்காரணமாக பல மக்கள் இன்று கடனாளியாக மாறி இருக்கிறார்கள்.

இந்த வீடு தொடர்பான விடயங்களை சார்ந்த கௌரவ அமைச்சரிடம் முன்வைக்கும் ஒரு வேண்டுகோள் நீங்கள் மட்டக்களப்பு மாவட்டத்துக்கு வரும் போது தயவு செய்து நீங்கள் மட்டக்களப்பில் இருக்கும் ஆளும் கட்சியை சேர்ந்த சிவநேசதுரை சந்திரகாந்தன், வியாழேந்திரன் ஆகியோரை மட்டும் நீங்கள் கூப்பிட்டு பேசாமல், நீங்கள் எதிர்க்கட்சியிலே இருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களையும் அழைத்து பேச வேண்டும்.“ எனத் தெரிவித்துள்ளார்.

Spread the love