வியட்நாமில் தங்கவைக்கப்பட்டிருந்த இலங்கையர்கள் 23 பேர் நாட்டிற்கு அழைத்துவரப்பட்டனர்

சட்டவிரோதமாக கடல் மார்க்கமாக வௌிநாடுகளுக்கு பயணிக்க முயன்று, வியட்நாமில் தங்கவைக்கப்பட்டிருந்த இலங்கையர்கள் 23 பேர் மீள நாட்டிற்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.   303 இலங்கையர்களுடன் பயணித்த வியட்நாம் கொடியைத் தாங்கிய மீன்பிடிப் படகு கடந்த ஆண்டு நவம்பர் 7 ஆம் திகதி வியட்நாம் கடலில் மூழ்கியது. 

இவர்கள் இலங்கை கடற்படையின் மீட்புப் பிரிவின் ஒத்துழைப்புடன் பாதுகாப்பாக மீட்கப்பட்டு, வியட்நாமில் அகதிகளாக தங்கவைக்கப்பட்டிருந்தனர்.  இவ்வாறு தங்கவைக்கப்பட்டிருந்தவர்களில் 151 பேர் ஏற்கனவே அழைத்து வரப்பட்டிருந்த நிலையில், மேலும் 23 பேர் கடந்த 19 ஆம் திகதி கட்டுநாயக்க விமான நிலையமூடாக நாட்டை வந்தடைந்தனர். 

சட்டவிரோதமாக கடல் மார்க்கமாக புலம்பெயர்ந்த குறித்த 303 இலங்கையர்களும், சட்டரீதியாக விமான நிலையத்தின் ஊடாகவே நாட்டை விட்டு வௌியேறியுள்ளமை தெரியவந்துள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.  இலங்கையில் இருந்து சட்டரீதியாக வௌியேறிய அவர்கள், மியன்மாரில் இருந்து சர்வதேச மனிதக் கடத்தல்காரர்களின் ஊடாக சட்டவிரோதமாக கடல் வழியாக பயணித்த போதே வியட்நாம் கடலில் படகு மூழ்கியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.  இவர்கள் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

Spread the love