பல்வேறு நாடுகளின் பங்களிப்பில் விண்வெளியில் சர்வதேச விண்வெளி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு ஜின்னியா ரக செடியை நாசா விஞ்ஞானிகள் நட்டு வளர்த்தனர்.செம்மஞ்சள் வண்ணத்தில் மலர்ந்துள்ள இந்த ஜின்னியாதான் பூமிக்கு அப்பால் மலர்ந்த முதல் மலர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தக் குறிப்பிட்ட பரிசோதனையானது 2015இல் நாசா விண்வெளி வீரர் ஜெல் லிண்ட்கிரெனால் தொடங்கப்பட்டது. மைக்ரோகிராவிட்டி எனப்படும் நுண்ஈர்ப்பு விசையில் தாவரங்களும் மலர்களும் எப்படி வளர்கின்றன என்பதை விஞ்ஞானிகள் புரிந்துகொள்ள வாய்ப்பாக நாசா விஞ்ஞானிகள் இந்த மலர்ச்செடியை சர்வதேச விண்வெளி நிலையத்தில் வளர்த்துள்ளனர். இந்த மலரை மலரச் செய்ததன் மூலம் விண்வெளியில் அதிக தாவரங்களை வளர்க்க முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது.
இந்நிலையில், விண்வெளி நிலையத்தில் வளர்ந்துள்ள ஜின்னியா பூவின் படத்தை நாசா பகிர்ந்துள்ளது. இதுதொடர்பாக நாசா வெளியிட்டுள்ள அறிக்கையில், செவ்வாய் கிரகத்திற்குச் செல்வது போன்ற எதிர்கால நீண்ட தூர பயணங்கள், மனிதர்கள் தங்கள் சொந்த உணவைப் பயிரிட வேண்டும். எனவே விண்வெளியில் தாவரங்கள் எவ்வாறு வளர்கின்றன என்பதைப் புரிந்துகொள்வது அவசியம். இந்த ஜின்னியா சர்வதேச விண்வெளி நிலையத்தில் காய்கறி வசதியின் ஒரு பகுதியாக சுற்றுப்பாதையில் வளர்க்கப்பட்டது.
விஞ்ஞானிகள் 1970களில் இருந்து விண்வெளியில் தாவரங்களை ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், சுற்றுப்பாதையில் தாவரங்கள் எவ்வாறு உருவாகின்றன என்பதைக் கற்றுக்கொள்வது பூமியிலிருந்து பயிர்களை எவ்வாறு வளர்ப்பது என்பதைப் புரிந்துகொள்ள உதவுகிறது. சந்திரன், செவ்வாய் மற்றும் அதற்கு அப்பால் நீண்டகால பயணங்களில் புதிய உணவின் மதிப்புமிக்க ஆதாரத்தை வழங்குகிறது என தெரிவித்துள்ளது.