கடன் மறுசீரமைப்பின் போது முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் தொடர்பில் தெளிவூட்டுவதற்காக ஜனாதிபதி ஊடகப் பிரிவினால் இன்று(29) விசேட ஊடக சந்திப்பொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மத்திய வங்கியின் ஆளுநர், கலாநிதி நந்தலால் வீரசிங்க, நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன ஆகியோர் தலைமையில் இந்த ஊடக சந்திப்பு நடத்தப்பட்டது.
நாட்டின் வங்கி கட்டமைப்பிற்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் கடன் மறுசீரமைப்பு செயற்றிட்டம் திட்டமிடப்பட்டுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர், கலாநிதி நந்தலால் வீரசிங்க இதன்போது தெரிவித்தார்.
இதனூடாக இலங்கை மத்திய வங்கியினால் விநியோகிக்கப்பட்டுள்ள முறிகள் மற்றும் EPF, ETF உள்ளிட்ட நிதியங்களில் கொள்வனவு செய்யப்பட்டுள்ள முறிகள் மறுசீரமைப்பிற்கு உட்படுத்தப்படும் எனவும் மத்திய வங்கியின் ஆளுநர் கூறினார்.
இதன் கீழ் இதுவரை விநியோகிக்கப்பட்டுள்ள அனைத்து முறிகளையும் புதிய வட்டி வீதத்தின் கீழ் மீள விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
புதிதாக விநியோகிக்கப்பட்டுள்ள முறிகளுக்கு 2025 ஆம் ஆண்டு வரை 12 வீத வட்டி செலுத்தப்படுவதுடன் அதன் பின்னர் 9 வீத வட்டி பெற்றுக் கொடுக்கப்படும் என மத்திய வங்கியின் ஆளுநர் இதன்போது கூறியுள்ளார்.
புதிய கடன் மறுசீரமைப்பு திட்டத்தினூடாக EPF மற்றும் ETF நிதியங்களின் அங்கத்தவர்கள் தமது பணத்தை பெற்றுக்கொள்வதில் எவ்வித சிக்கல்களும் ஏற்படாது என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர், கலாநிதி நந்தலால் வீரசிங்க இன்றைய(29) ஊடக சந்திப்பின் போது சுட்டிக்காட்டியுள்ளார்.