இந்தியாவின் பங்களிப்பில்லாமல் பிரச்சினைக்கு நிரந்தரமான அரசியல் தீர்வு கிடைக்கப்போவதில்லை

இந்தியப் பிரதமருக்கு கடிதம் அனுப்புவதற்காக ரெலோ எடுத்த முயற்சியிலிருந்து யாராவது பின்வாங்க விரும்பினால் அல்லது கையொப்பம் இடமறுத்தால் அது யாராக இருந்தாலும் அவர்களை விலக்கிவைத்துவிட்டு, அந்தவரைவை கையொப்பமிட்டு அனுப்புவதற்கான சகல ஏற்பாடுகளையும் செய்வோம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம் தெரிவித்தார். 

வவுனியாவில் நேற்று ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போது அவர் மேலும் தெரிவிக்கையில், அனைத்துக் கட்சிகளும் இணைந்து தயாரித்த வரைவை தமிழ் அரசுக்கட்சி முற்றாக நிராகரிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரன் தெரிவித்துள்ளார். எனினும், கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இன்னும் ஓரிரு நாள்கள் பிந்தினாலும் கூட இறுதிவரைவை தயாரித்து அனைவரும் கையொப்பமிட்டு இந்தியப் பிரதமருக்கு அனுப்புவோம் என்று உறுதிமொழி அளித்துள்ளார். நாம் எடுத்த முயற்சியைக் கைவிடப்போவதில்லை. வார்த்தைப்பிரயோகங்களைச் சாட்டாகவைத்துக்கொண்டு ரெலோ எடுத்த முடிவுக்குப்பின்னால் நாங்கள் செல்வதா? என்ற சிறுபிள்ளைத்தனமான அல்லது தமிழ் மக்களை ஏமாற்றநினைக்கின்ற தமிழ் அரசுக்கட்சியின் செயற்பாட்டை எங்களால் ஏற்றுக்கொள்ளமுடியாது. இலங்கை-இந்திய ஒப்பந்தத்தின் விளைவுதான் 13 ஆவது திருத்தம். ஆகவே ஒன்றுக்கொன்று முடிச்சுப் போட்டு அதுவேறு இதுவேறு, தலைப்பு வேறு, வார்த்தைப் பிரயோகங்கள் வேறு என்று சொல்வது சிறுபிள்ளைத்தனமானது.

இந்தியாவின் பங்களிப்பில்லாமல் எமது அரசியல் ரீதியான பிரச்சினைக்கு நிச்சயமாக நிரந்தரமான அரசியல் தீர்வு கிடைக்கப்போவதில்லை. அதை உணர்ந்து அனைத்து தமிழ்த் தேசியக்கட்சிகளும் செயற்படவேண்டும். அந்தவகையிலேயே இந்த முயற்சியை எடுத்துள்ளோம். இது நிச்சயம் வெற்றிபெறும். இந்த விடயத்தில் எந்தவொரு ஆலோசனையும் இந்தியாவிடமிருந்து நாம் பெறவில்லை . இந்தியா எமக்கு எந்தவித அழுத்தங்களையும் வழங்கவில்லை. ஆனால், நாம் பாதிக்கப்பட்ட இனம் என்ற வகையில், கடந்தகாலங்களில் அரசியல் ரீதியாகவோ அல்லது வேறு வழியிலோ எமக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கினார்கள் என்ற ரீதியில், அவர்களால் கொண்டுவரப்பட்ட சர்வதேச ஒப்பந்தம் என்ற ரீதியில் அழுத்தங்கள் என்பதற்கு அப்பால் தமிழ் மக்களின் விடுதலைக்காக செய்கின்ற பெரிய கைங்கரியமாக இதனைப் பார்க்கின்றோம் என்று தெரிவித்தார்.

Spread the love