யாழ்ப்பாணத்திற்கான தனது விஜயம் மற்றும் யாழ்ப்பாணத்தீவுகளில் மின்சக்தி திட்டம் குறித்தும் கருத்து வெளியிட்டுள்ள சீனத்தூதுவர் குய் சென் ஹாங் (Qi Zhenhong) கொவிட் நிலவரம் காரணமாகவே யாழ்ப்பாணத்திற்கான விஜயம் தாமதமாகியுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
மூன்று தசாப்தகால யுத்தம் வெற்றிகரமாக முடித்துவைக்கப்பட்ட பின்னர் வடபகுதிக்கு எவ்வாறு உதவலாம் என்பது குறித்து சீனா ஆர்வமாக உள்ளது. இலங்கையின் பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்திற்கு ஆதரவளிக்காமல் பல நாடுகள் பின்வாங்கிய போது சீனா இலங்கைக்கு அவசியமான ஆயுதங்களையும் பயிற்சிகளையும் வழங்கியது எனவும் அவர் தெரிவித்துள்ளார். சீனாவிற்கு இரகசிய நிகழ்ச்சி நிரல் உள்ளது என்பதை நிராகரித்துள்ள தூதுவர், வடபகுதி மின் திட்டங்களை இரத்துச் செய்வதால் இலங்கைக்கு பாரதூரமான பாதிப்பு ஏற்படாலாம் என தெரிவித்துள்ளார்.
இலங்கையுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையொன்றை செய்துகொள்வது குறித்து விருப்பத்தை வெளியிட்டுள்ள இலங்கைக்கான சீனத்தூதுவர் கூடியவிரைவில் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளார். கொழும்பில் பத்திரிகையாளர்கள் சிலருடனான கருத்துப்பரிமாற்றத்தின் போது இதனை தெரிவித்துள்ள சீனத் தூதுவர் இலங்கையின் தற்போதைய சூழ்நிலையை சீனா எந்த தருணத்திலும் தனக்கு சாதகமாக பயன்படுத்தாது என குறிப்பிட்டுள்ளார். இருநாடுகளிற்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மூலோபாய ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்தது என சீனத் தூதுவர் வர்ணித்துள்ளார். இலங்கை எதிர்கொண்டு வரும் நிதிநெருக்கடிக்கு தீர்வை காண்பதற்கு சீனாவும் இலங்கையும் இணைந்து எடுத்துள்ள முயற்சிகள் குறித்து சீனத் தூதுவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
இலங்கை திருப்பி செலுத்த வேண்டிய கடன்கள் தொடர்பில் சீன புதிய மாற்றங்களை மேற்கொள்ளுமா என்ற கேள்விக்கு சீனத் தூதுவர் பதிலளிக்க தவறியுள்ளார். இலங்கை எதிர்கொண்டுள்ள கடனை மீள திருப்பி செலுத்தவேண்டிய நெருக்கடிகள் குறித்து கருத்து தெரிவித்துள்ள தூதுவர், இலங்கை இந்த கடினமான சவால்களை வெற்றிகொள்ளும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இலங்கை கடந்த காலங்களில் மிகப்பெரிய சவால்களை எதிர்கொண்டது என தெரிவித்துள்ள தூதுவர், தற்போதைய நிலவரம் தற்காலிகமானது எனவும் குறிப்பிட்டுள்ளார். சுதந்திர வர்த்தக உடன்படிக்கை இலங்கைக்கு எவ்வாறு நீண்ட கால அடிப்படையில் உதவியாக விளங்கும்? என்பதை சுட்டிக்காட்டியுள்ள அவர் அது இலங்கைக்கு பாதகமானது என தெரிவிக்கப்படுவதை நிராகரித்துள்ளார். இலங்கையுடனான சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை சில நாடுகள் தமக்கு சாதகமாக பயன்படுத்தியுள்ளன. இலங்கை தாமதமின்றி இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திடப்படுவதை உறுதி செய்யவேண்டும் ஊடகங்கள் இது குறித்து இலங்கை அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பவேண்டும் எனவும் அவர் கூறினார்.
சீனத் தூதுவருடனான இந்த சந்திப்பின் பொது ஐலண்ட் நாளிதழ் பல மாசடைந்த கார்போனிக் உரக்கப்பல் – நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்சவின் கடிதம் உட்பட பல விடயங்கள் குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது. இலங்கையில் காணப்படும் மோசமான ஊழல் அமைப்பினை சீனா தனக்கு சாதகமாக பயன்படுத்துகின்றது என விஜயதாச ராஜபக்ச சமீபத்தில் குற்றம் சாட்டியிருந்தார். சீனா விஜயதாச ராஜபக்சவின் குற்றச்சாட்டுகள் குறித்து அரசாங்கத்துடன் பேசுமா? என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள சீனத்தூதுவர் நாடு பல கருத்துக்களிற்கு இடமளிப்பது என்பதால் இவ்வாறான கருத்துக்கள் வழமையான விடயம் என தெரிவித்துள்ளார். அவ்வாறான குற்றச்சாட்டுகளிற்கு இடமில்லை என தெரிவித்துள்ள சீனத் தூதுவர் இருநாடுகளிற்கும் இடையிலான இருதரப்பு உறவுகளின் தற்போதைய நிலை விஜயதாச ராஜபக்சவின் குற்றச்சாட்டினை தீவிரமாக கருதமுடியாது என்பதை வெளிப்படுத்தியுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார். யாழ்ப்பாணத்திற்கான தனது விஜயம் மற்றும் யாழ்ப்பாண தீவுகளில் மின்சக்தி திட்டம் குறித்தும் கருத்து வெளியிட்டுள்ள சீனத்தூதுவர் கொவிட் நிலவரம் காரணமாகவே யாழ்ப்பாணத்திற்கான தனது விஜயம் தாமதமானது என தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் இலங்கையின் வடக்கில் இருக்கின்றது எந்த நாட்டிற்கும் தெற்கில் இல்லை என அவர் கூறினார்.