தமிழகத்தின் மதுரையில், 99 கோடி ரூபா செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள, கலைஞர் நினைவு நூலகத்திற்கு, முதல்வர் ஸ்டாலின் இணைய நேரடிக்காணொளி வழியாக, அடிக்கல் நாட்டினார். சங்கத் தமிழ் வளர்த்த மதுரையில், கலைஞர் நினைவு நூலகம், 2 லட்சம் சதுர அடி பரப்பளவில், நவீன வசதிகளுடன் அமைக்கப்படுமென, கருணாநிதியின் 97 வது பிறந்த தினத்தில், முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி, மதுரை புதுநத்தம் சாலையில் அமைந்துள்ள, பொதுப்பணித்துறை வளாகத்தில்,2.70 ஏக்கர் நிலத்தில், 99 கோடி ரூபா செலவில், 2.13 லட்சம் சதுர அடி பரப்பளவில், எட்டுத் தளங்களினைக் கொண்ட கலைஞர் நூலகம் நிர்மாணிக்கப்படவுள்ளது. இந்த நூலகத்திற்கான அடிக்கல், தமிழக முதல்வர் ஸ்டாலினால், நேற்று முன்தினம், நேரடி இணையக் காணொளி வழியாக நாட்டப்பட்டது. இந்த நூலகத்திற்குத் தேவையான நூல்கள், மின் நூல்கள், இணையவழி பருவ இதழ்கள், ஆராய்ச்சி நூல்கள், ஆகியவற்றினைக் கொள்வனவு செய்வதற்கு,10 கோடி ரூபாவும், தொழில்நுட்ப சாதனங்களைக் கொள்வனவு செய்வதற்கு, 5 கோடி ரூபாவும், மாநில அரசினால், ஒதுக்கப்பட்டுள்ளது.
2022-01-13