இந்தியா டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோலி, தலைவர் பதவியினை இராஜினாமா செய்துள்ளார். தென்னாபிரிக்கா அணிக்கெதிரான டெஸ்ட் தொடர் 1-2 என்ற தோல்வியில் நிறைவடைந்துள்ள நிலையில் இந்த அறிவித்தலை அவர் வெளியிட்டுள்ளார்.
20-20 உலக கிண்ண கிரிக்கெட் தொடர் நிறைவடைந்ததுடன் 20-20 போட்டிகளுக்கான தலைமை பொறுப்பிலிருந்து விலகினார். அதனை தொடர்ந்து மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கிரிக்கெட் போட்டிகளுக்கு ஒரே அணி தலைவர் இருக்க வேண்டுமென்ற காரணத்தினால் விராட் கோலி ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி தலைமை பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார்.
விராட் கோலியின் அணி தலைமை தொடர்பில், அவர் 20-20 போட்டிகளில் இருந்து பதவி விலகியதிலிருந்து சர்ச்சைகள் ஏற்பட்டுக்கொண்டிருக்கின்றன. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் தலைவர் சவுரவ் கங்குலி, விராத் கோலி ஆகியோருக்கிடையிலான முறுகல் நிலையின் வெளிப்பாடாகவே கோலி தலைவர் பொறுப்பு விலகல் கருதப்படுகிறது.
விராட் கோலியின் அண்மைக்கால துடுப்பாட்ட வீழ்ச்சி அவர் மீது மேலும் அழுத்தங்களை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா அணிக்காக கூடுதலான டெஸ்ட் வெற்றிகளை பெற்றுக் கொடுத்த விராத் கோலி, உலகில் நான்காவது இடத்தில் காணப்படுகிறார். இந்தியா அணியின் தலைவராக 68 போட்டிகளில் 40 வெற்றிகளையும், 11 சமநிலை முடிவுகளையும் பெற்றுள்ள அதேவேளை, 17 போட்டிகளில் தோல்விகளை பெற்றுள்ளார்.
விராட் கோலியின் பதவி விலகல் தொடர்பில் இந்தியா கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை எந்த பதிலையும் இதுவரை அறிவிக்கவில்லை. அடுத்த டெஸ்ட் தலைவராக யார் நியமிக்கபப்டுவார் என்ற தகவல்கள் வெளியாகவில்லை. ரோஹித் ஷர்மா டெஸ்ட் அணியிலும் முழுமையான இடத்தை பெற்றுள்ள நிலையில் சகலவித கிரிக்கெட் போட்டிகளுக்கும் அவர் தலைவராக நியமிக்கப்படும் வாய்ப்புகள் காணபப்டுகின்றன.
ரோஹித் ஷர்மா சிறந்த தலைவராக செயற்படும் வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக நீண்ட காலமாக நம்பப்பட்டு வருகிறது. ஆனால் அவர் தன்னுடைய திறமையினை காட்ட முதலே உபாதை காரணமாக அணியிலிருந்து விலகியுள்ளார்.
அடுத்த தொடர் ஆரம்பிக்கும் போதே அவரின் செயற்பாடுகள் தொடர்பில் கணக்கிட முடியும். இந்தியா அணி பயிற்றுவிப்பாளர்களை மாற்றம் செய்துள்ளது. தலைமை பொறுப்பும் மாற்றம் பெற்றுள்ளது. அணியினை மீளுருவாக்கம் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.
விராட் கோலியின் பதவி விலகல் அவரின் துடுப்பாட்டத்தில் அவர் மேலதிக கவனம் செலுத்தக் கூடியதாக இருக்கும். இழந்துள்ள போர்மை மீள பெறவும் இது அவருக்கு கைகொடுக்கும். அழுத்தங்களின்றி ஓட்டங்களை குவிக்கும் வீரராக மாறுவாரா? பொறுத்திருந்து பார்க்கலாம்.