“13 ஆம் திருத்த சட்டம் வேண்டாம். சமஸ்டி தீர்வே வேணும்” என கோரும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் ஊர்வலம் நேற்று ஆரம்பித்திருந்தது. முல்லைத்தீவு, மல்லாவியில் ஆரம்பித்த இந்த போராட்டம், விடத்தல் தீவினூடாக பயணித்து, மன்னார் சென்று, நேற்று இரவு வவுனியாவை சென்றடைந்தது.
இரண்டாவது நாளாக இன்று வவுனியாவிலிருந்து ஆரம்பித்துள்ள போராட்டம், முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களுக்கு சென்று யாழ்ப்பாணம் சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஊர்வலத்தின் இறுதி நிகழ்வாக யாழ்ப்பாணம், நால்லூரில் 30 ஆம் திகதி காலை 9.30 மணிக்கு மாபெரும் பேரணி ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஏற்கனவே அறிவித்துள்ளார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு அடங்கலாக வடக்கு கிழக்கினை பிரதிநிதித்துவம் செய்யும் தமிழ் கட்சிகள் 13 ஆம் திருத்த சட்டத்தை அமுல் செய்ய கோரியும், அதற்கு அழுத்தும் வழங்குமாறும் இந்திய பிரதமருக்கு கடிதம் அனுப்பியுள்ள நிலையில், அதற்கு தமது எதிர்ப்பினை தெரிவித்தும், ஒற்றையாட்சிக்குள் சமஸ்டி தீர்வே என்பதனையும் வலியுறுத்தி இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.