அண்மைக்காலமாக கம்பஹா மற்றும் கொழும்பு மாவட்டங்களில் கொவிட்-19 பரவலில் பாரிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தொற்றுநோய்கள் மற்றும் கொவிட்-19 நோய் கட்டுப்பாட்டு இராஜாங்க அமைச்சர் வைத்தியர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், ஓமிக்ரொன் திரிபின் விரைவான பரவலில் பாதிக்கப்பட்ட அதிகமானோர் அறிகுறிகள் அற்றவர்களாகவே அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அறிகுறியற்ற தொற்றாளர்களின் அதிகரிப்பானது, முதியோர்கள் மற்றும் பிற தொற்றாத நோய்களால் பாதிக்கப்பட்டவர்களின் ஆரோக்கியத்திற்கு அதிக தீங்கு விளைவிக்கும்.
அத்தகைய சூழ்நிலையில், பூஸ்டர் டோஸ் ஒருவரின் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துவதால், அதற்கு அதிக முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
தொற்று நோய் பரவ தொடங்கியதிலிருந்து கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய இரண்டு மாவட்டங்களும் கொவிட் Hotspots இடங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன, மேலும் குறிப்பிடப்பட்ட மாவட்டங்களில் COVID-19 இன் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.