பயங்கரவாத தடை சட்டம் மீள் திருத்தப்படும் வர்த்தமானி பிரகடனம் வெளியாகியுள்ள நிலையில், இச்சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும் என்றும் அதற்கான காலம் இன்று கணிந்து விட்டது எனவும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி தெரிவித்துள்ளார்.
ஐநா மனித உரிமை ஆணையகத்தை, ஐரோப்பிய GSP ஐ நோக்கி, அரசு சார்பாக வெளிவிவகார அமைச்சர் பீரிஸ், இதை வேறு வழியில்லாமல் அறிவித்துள்ளார். எனினும் இதுவும் ஒரு முன்னேற்றம்தான். ஆனால், இச்சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும் என்ற எமது குரலை நாம் நிறுத்திவிடக்கூடாது என்றும் அவர் கூறினார்.
வெளிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ், இலங்கை வெளிநாட்டு தூதர்களை அழைத்து, பயங்கரவாத தடை சட்ட திருத்தங்கள் பற்றி அறிவித்துள்ளமை மற்றும் இதுபற்றிய வர்த்தமானி வெளியாகியுள்ளமை தொடர்பில் மனோ கணேசன் எம்.பி கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் தொடர்ந்தும் அதுபற்றி கருத்து தெரிவிக்கையில், ஐநா என வெளி சக்திகளுடன் பேசாது உள்நாட்டு தரப்புடன் பேசுங்கள் என எமக்கு வகுப்பு எடுத்து அறிவுரை கூறுபவர்களுக்கும், இலங்கை அரசியலை இன்னமும் சரியாக புரிந்துகொள்ளாத அரசியல் குழந்தைகளுக்கும் இது சமர்ப்பணம்.
என்னை பொறுத்தவரையில், இந்த சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும். அதற்கான காலம் இன்று கணிந்து விட்டது என நினைக்கிறேன்.
அவசர நிலைமைகளுக்கு சாதாரண சட்டங்களே போதும். அதி அவசரம் ஏற்படுமானால், சடுதியாக இந்த சட்டத்தை மீள உடன் கொண்டும் வரலாம். ஒரே நாளில் அரசியலமைப்பு திருத்தங்களையே கொண்டு வந்தவர்களுக்கு இது பெரிதல்ல.
ஆனால், இன்று சட்ட புத்தகங்களில் இருந்து இச்சட்டம் முழுமையாக அகற்றப்படுவது அவசியம். ஏனெனில் போர் முடிந்த பத்து ஆண்டுகள் ஆன பிறகும் அமுலில் இருக்கும் இச்சட்டம் ஏற்கனவே கணிசமான துன்புறுத்தல்களை தந்து கொண்டுதான் இருக்கிறது. குறிப்பாக தமிழ் பேசும் மக்களை நோக்கி இது பாய்கிறது.ஆனால், இதில் நடப்பு அரசை மட்டும் குறை கூற முடியாது.
இந்த அரசு மட்டுமல்ல, எந்த இலங்கை அரசும் முழுமையாக இச்சட்டத்தை நீக்க முன்வரவில்லை. இந்த சட்டத்தால் பெரிதும் பாதிக்கப்படும் தமிழ், முஸ்லிம் மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் அரசியல்வாதிகள் சிலரே இச்சட்டம் முழுமையாக நீக்க கூடாது என கொடி பிடிக்கிறார்கள்.
எனினும், அரசுக்கு அரசு இச்சட்டம் அமுல் செய்வதில் வேறுபாடு உண்டு. எமது நல்லாட்சியில் அது அப்பட்டமாக தெரிந்தது. எமது ஆட்சியின் போது இந்த சட்டம் கவனமாகத்தான் பயன்படுத்தபட்டது. எமது அரசு காலத்தில், இது தொடர்பான பல்வேறு கலந்துரையாடல்களில் நான், தேசிய ஒருமைப்பாடு அமைச்சராக கலந்துக் கொண்டுள்ளேன்.
1979ஆம் ஆண்டின் 48ஆம் இலக்க பயங்கரவாத தடை சட்டம் மீள திருத்தப்படுகிறது என்ற வெளிவிவகார அமைச்சரால், ஜனவரி 21ஆம் திகதி வெளியிடப்பட்ட இந்த வர்த்தமானி பிரகடனம், எமக்கு ஒரு அடிப்படை உண்மையை மீளவும் எடுத்து உரைக்கிறது.
ஐநாவோ, அமெரிக்காவோ, ஐரோப்பிய யூனியனோ, இந்தியாவோ, ஏதாவது வெளி சக்திகள் சொன்னால்தான் இந்த அரசு கொஞ்சமாவது நகருகிறது. இதுதான் இங்கே கவனிக்கப்பட வேண்டிய முக்கிய விடயம்’ என மனோ எம்.பி மேலும் தெரிவித்தார்.