கொள்கலன்களை உடனடியாக விடுவிக்க ஜனாதிபதி பணிப்புரை

அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை உடனடியாக விடுவிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார். சுங்கத்திணைக்களத்தின் வசமுள்ள அத்தியாவசியப்பொருள்களை விடுவிப்பது தொடர்பாக கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

சந்தையில் உணவுப்பொருளகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப் படுவதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை தட்டுப்பாடின்றி வழங்குவதற்காக, நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ தலைமையிலான குழுவொன்றை நியமிக்கவும் கலந்துரையாடலில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் பண்டிகை காலத்தின்போது, உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களைத் தட்டுப்பாடின்றி பொதுமக்கள் கொள்வனவு செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்யவேண்டுமென குறிப்பிட்ட ஜனாதிபதி, அதற்காக தற்போது முதல் உரிய திட்டமிடல்களை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி யுள்ளார். தெரிவு செய்யப்பட்ட சில அத்தியாவசியப் பொருள்களின் கொள்வனவுக்குச் சந்தர்ப்பம் வழங்குமாறும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

Spread the love