உலகிலேயே 100 சதவீதம் காகிதம் இல்லாத அரசாங்கமாக டுபாய் மாறியுள்ளதாக எமிரேட்ஸ் பட்டத்து இளவரசர் அறிவித்துள்ளார். டுபாயில் கடந்த 2018ம் ஆண்டு முதல் காகிதமில்லா டிஜிற்றல் நகரமாக மாற்றும் திட்டம் செயற்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தை ஐந்து கட்டங்களாக பிரித்து பட்டியலிடப்பட்டன. இதன் ஐந்தாவது கட்டத்தின் முடிவில், டுபாயில் 45 அரசு துறைகளும் காகிதமற்றவையாக மாற்றப்பட்டன. இதன்மூலம், உலகின் முதல் காகிதமில்லா அரசு என்ற பெருமையை டுபாய் பெற்றுள்ளது.
இந்த துறைகள் 1,800 க்கும் மேற்பட்ட டிஜிற்றல் சேவைகள் மற்றும் 10,500 க்கும் மேற்பட்ட முக்கிய பரிவர்த்தனைகளை வழங்குகின்றன. இதுகுறித்து, எமிரேட்ஸ் பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, இந்த சாதனை புதுமை, படைப்பாற்றல் மற்றும் எதிர் காலத்தில் கவனம் செலுத்தும் பயணம். இது டுபாயின் உலக முன்னணி டிஜிற்றல் மூலதனம் மற்றும் வாடிக்கையாளர்களின் மகிழ்ச்சியை மேம்படுத்தும். அரசாங்க செயற்பாடுகள் மற்றும் சேவைகளை வடிவமைப்பதில் இது ஒரு முன்மா திரியாக அதன் நிலையை வலுப்படுத்துகிறது. இத்திட்டத்தின் மூலம், டுபாய் அரசாங்கத்திற்கு 350 மில்லியன் அமெரிக்க டொலர் சேமிக்கப்படுவதுடன், 14 மில்லியனுக்கும் அதிகமான மனித வேலை நேரமும் மிச்சமாகிறது” என அவர் தெரிவித்தார்.