கனடாவைப் போல பிரான்ஸ் தலைநகரை முற்றுகையிடமுனைந்து அதில் வெற்றியை பெறமுடியாத கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களுக்கு எதிரான சுதந்திரத்தின் பேரணி, இன்று தமது நூற்றுக்கணக்கான வாகனங்களுடன் பிரஸ்ஸல்ஸ் மற்றும் ஸ்ட்ராஸ்பேர்க்க நகரங்களுக்கு பயணித்துள்ளது.
இதனையடுத்து பிரெசெல்சில் ஆர்ப்பாட்டங்களுக்கு தடைவிதித்துள்ள பெல்ஜிய அதிகாரிகள் தடையை மீறி தலைநகருக்குள் நுழைய முயலும் வாகனங்கள் திருப்பியனுப்படும் எனவும் எச்சரித்துள்ளனர். பிரான்சின் வடபகுதி நகரான லில் இல் நேற்று இரவைக் கழித்த இந்த அணி இன்று பகல் பிரஸ்ஸல்சுக்குச் செல்ல முயற்சித்த நிலையில், இன்னொரு அணி ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் முன்னால் தமது எதிர்ப்புப்போராட்டங்களை நடத்தும் வகையில் ஸ்ட்ராஸ்பேர் நகரை நோக்கி பயணப்பட்டிருந்தது.
இந்த நிலையில் பிரெசெல்ஸ் நகரை ஆர்ப்பாட்டக்காரர்கள் முடக்குவதை தடைசெய்யயும் வகையில் பிரான்சில் இருந்து வரும் சுதந்திரத்தின் பேரணியில் உள்ள வாகனங்கள் திருப்பி விடப்படும் என எச்சரித்துள்ள காவல்துறை அங்கு வீதித்தடைகளையும் ஏற்படுத்தியுள்ளது. பரிஸ் நகரில் கடந்த சனிக்கிழமையன்று, நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் பரிஸ் நகரின் முக்கிய வீதியான சாம்ஸ் எலிசேசையை முற்றுகையிட முனைந்தாலும் காவல்துறையின் பலப்பிரயோகம் மூலம் போராட்டக்காரர்கள் வெளியேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.